நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டி டி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிரஞ்சு குத்து’ பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘டி டி ரிட்டன்ஸ்’ இந்த திரைப்படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பெப்சி விஜயன், தீனா, தீபா சங்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், சைதை சேது, மனோகர், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஃப்ரோ இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. ரமேஷ் குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற பிரெஞ்சு குத்து எனும் பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் துரை எழுத, பின்னணி பாடகர் கானா முத்து மற்றும் இசையமைப்பாளர் அஃப்ரோ இணைந்து பாடியிருக்கிறார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த பாடல் துள்ளல் இசையுடன் கூடிய பிரெஞ்சு குத்து பாணியில் அமைந்திருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.