ஆட்சியிலிருந்து மக்களால் இறக்கப்பட்டோர் மீண்டும் அதிகாரத்துக்கு வர கனவு கண்டுகொண்டு பல்வேறு சதிகளை மேற்கொண்டாலும் எவராலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மக்களுக்கு பெரும்பான்மையின பிரிவினரால் பாதிப்புக்களை ஏற்படுத்த ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குருநாகல் – இப்பாகமுவ ஹமீதியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றல் வள நிலைய திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் வேலைநிறுத்தத்தை நிறுத்தி உடனடியாக பணிக்கு திரும்புமாறு தாம் அவர்களிடம் கோருவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவர்களும் இன்று வேலை நிறுத்தத்தை விளையாட்டாக மாற்றியுள்ளதுடன், அதனால் மனித உயிர்களுக்கு எந்தவொரு பெறுமதியும் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அரசாங்கம் சீன நிறுவனத்துடன் ஏற்படுத்த உத்தேசித்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மிக தவறான புரிதல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பையும் எந்தவொரு நாட்டுக்கோ, கம்பனிக்கோ உறுதிப்பத்திரம் மூலம் உரித்தளிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.