2013ல் வெளிவந்த ‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் நடித்த படங்கள் பெரிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. அதன் பின் அவர் நடித்து வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி, மருது, கத்திச் சண்டை’ ஆகிய ஏழு படங்களல் சில படங்கள் மிக மிகச் சுமாரான படங்களாகவும், சில படங்கள் மோசமான படங்களாகவும் அமைந்தன.
நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என அந்தப் பதவிகளுக்காகவும் அவர் ஓடியதாலோ என்னவோ நல்ல கதைகளைத் தேர்வு செய்வதில் தவறிவிட்டார். எப்படியோ சமீபத்தில் வந்த ‘துப்பறிவாளன்’ படம் அவருடைய மார்க்கெட்டை நிலைநிறுத்துவிட்டது. படத்தை வாங்கியவர்களுக்கு ஓரளவிற்கு லாபத்தையும் கொடுத்துள்ளது. ‘துப்பறிவாளன்’ படம் ‘டிடெக்டிவ்’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் நல்ல விமர்சனத்துடன் லாபத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
இதனால், ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டே ஆரம்பித்துவிட விஷால் திட்டமிட்டுள்ளாராம். இது பற்றி விஷாலே பேசியுள்ளார். அவர் தற்போது ‘இரும்புத் திரை, சண்டக் கோழி 2’ ஆகிய படங்களில நடித்து வருகிறார். இதில் ‘இரும்புத் திரை’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கோடை விடுமுறையில் ‘சண்டக் கோழி 2’ படம் வந்துவிடுமாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.