கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் தேதி, வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள், இப்போதிருந்தே, வாக்காளர்களுக்கு, பரிசுகளை வாரி வழங்கி வருகின்றன.
கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வரும் மார்ச் மாதம், தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், கடுமையான தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பின், வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களை கவர முடியாமல் போய் விடும் என்பதால், இப்போதிருந்தே, அரசியல் கட்சிகள், பரிசுகளை வாரி வழங்கத் துவங்கி உள்ளன.
பிறந்த நாள் விழா, பண்டிகை, திருவிழா என, ஏதாவது காரணம் சொல்லி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பரிசுகளை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு தேவையான, குடம், கடாய் போன்றவற்றுடன், விலை அதிகமான தங்க மோதிரம், மூக்குத்தி, ஸ்மார்ட் போன், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சட்டசபை உறுப்பினர்களாக உள்ளோரும், தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவோரும், தங்கள் தொகுதி மக்களை, ‘கவனித்து’ வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை, 3,000 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக சிலர் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.