தலங்கம – பெலவத்த பிரதேசத்தில் 3 மாடி வீடொன்றில் நீச்சல் தடகத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ள வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வர்த்தகரின் கார் வெள்ளிக்கிழமை (03) நீர்கொழும்பிலுள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றுக்கு அருகில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் ,
பெலவத்தை எம்.டி.எச். பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள மீள் புதுப்பிக்கப்பட்டு வரும் வீடொன்றில் நீச்சல் தடாகத்தில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக நேற்று (02)பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு , விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி அவரது வர்த்தக நிலையத்திற்குச் சென்று இந்த வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.
30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த நபர் வீட்டுக்கு வருகை தராமையால் அவரது சகோதரி அது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். அதற்கமைய வெல்லம்பிட்டி பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அவர் கடந்த 30 ஆம் திகதி காரில் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , குறித்த வீட்டுக்கு அருகில் கார் காணப்படவில்லை.
அத்தோடு அவரது கையடக்க தொலைபேசி மற்றும் பணப்பை (பர்ஸ்) அங்கு காணப்படவில்லை. இது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைளை முன்னெடுத்து வருகின்றனர். சி.சி.ரி.வி. காணொளி பதிவுகள் எவையும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 49 வயதுடைய வெல்லம்பிட்டி – கித்தம்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்தோடு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகரின் கார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் , நேற்றைய தினம் நீர்கொழும்பு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.