டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் குளித்தலை அருகே மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ், இவரது மகள் பூஜா(5). கடந்த 5 நாட்களாக பூஜாவுக்கு இடைவிடாத காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தை பூஜாவை கரூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தங்களிடம் குழந்தைக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுங்கள் என்று மருத்துவர்கள் சொல்ல கடுமையான காய்ச்சலில் உடல் நலிவுற்றிருந்த குழந்தை பூஜாவை தூக்கிகொண்டு திருச்சி மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்துச்செல்ல , வழியிலேயே குழந்தை பூஜா உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தை பூஜாவின் சடலத்தை கிடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் ஊரில் உள்ள சுகாதார சீர்கேடுகளை களையவும், கரூர் அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் பூஜாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கிராம மக்கள் குழந்தையுடன் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.