அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல் கடிதம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
நாளை இந்த கடிதம் கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக மக்களை அணித் திரட்டும் மக்கள் பேரணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையிலேயே சஜித்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை கடிதமொன்றை பிரதமரிடம் கையளிக்கவுள்ளோம்.
இதுவரையில் 50 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிடுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவினையும் மீறி சஜித்திற்கு ஆதரவாக இன்றைய தினம் குருணாகலில் மக்கள் ஆதரவு கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்த குழப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பூதாகரம் ஆகியுள்ள நிலையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
தற்போது சஜித்திற்கு ஆதரவான நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ரணில் விக்கிரமசிங்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல் கடிதம் ஒன்று இதற்கு முன்னரும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.