சசிகலா அணியில் எம்எல்ஏக்களை இருப்பு வைப்பதற்காக பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ சரவணன் பேசியதாக வீடியோ காட்சி வெளியான பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுகவில் சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்கள் யாரும் இதனை மறுத்து கூறவில்லை. சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேர் மட்டும், நாங்கள் விலைபோகவில்லை என்று மறுத்துள்ளார்கள்.
கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பலரிடம் நாம் பேசினோம். வெளிப்படையாக தங்களை அடையாளப்படுத்தி எதுவும் கூற முடியாது என்று கூறிய அவர்கள், இறுதியாகவே விரிவாக நம்மிடம் பேசினார்கள். அவர்கள் பேசியதை அப்படியே தருகிறோம்.
அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்ட நாள் முதல் எம்எல்ஏக்களுக்கு பேசப்பட்டது விலைதான். இந்த சூழ்நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்றார்.
அவர் தனியாக சென்றது, எம்எல்ஏக்களின் தலைக்கு மேலும் கூடுதல் பலமானது. கூவத்தூர் முகாமில் அடைத்து வைப்பதற்காக எம்எல்ஏக்களை கூட்டிச் சென்றபோது பேசப்பட்ட விசயத்தைத்தான் சரவணன் கூறியிருக்கிறார்.
அப்படி கூவத்தூர் முகாமில் வைத்து, எங்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் பேசியது ஒவ்வொருவரின் தலைக்கும் 5 கோடி ரூபாய் மற்றும் ஒரு கிலோ தங்கம்.
இதனை உடனடியாக தருவதாகத்தான் அவர்கள் பேசினார்கள். இதில் தங்கம் எதற்காக தருகிறீர்கள், அதையும் பணமாகவே கொடுத்துவிடலாமே என்று ஒரு சிலர் கேட்டதற்கு, இல்லையில்லை, உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள், அதற்காகத்தான் தங்கம் என்று சசிகலா கூறினார்.
பேசியப்படியே முதல் செட்டில்மண்டாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தங்கம் டெலிவரி செய்யப்பட்டது. அந்த தங்கம் கூவத்தூர் முகாமில் டெலிவரி செய்யப்படவில்லை.
தமிழகத்தின் 4 பகுதிகளாக பிரித்து ஆங்காங்கே அந்த பகுதியில் உள்ள எம்எல்ஏக்களுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் யாரை அனுப்பினார்களோ அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
இதில் முக்கியமானது ஒரு சில எம்எல்ஏக்களின் மனைவிகளே வந்து, அதனை பெற்றுச் சென்றது உண்மைதான். அதன் பிறகுதான் பேசப்பட்ட தொகை மெல்ல ரிலீசாக தொடங்கியது. இது எல்லாமே சசிகலா அணியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பயனும், பலனும் கிடைத்தது.
இந்த நிலையில்தான் முகாமில் இருந்து வெளியே சென்ற சரவணன், இந்த விசயத்தை கேஸூவலாக பேசி ரகசியத்தை உடைத்துவிட்டார். ஆனால் இப்போது அந்த வீடியோ காட்சியில் உள்ளது நான்தான், வாய்ஸ் என்னுடையது இல்லை என சரவணன் மறுத்திருக்கிறார்.
இது மாப்பிள்ளை நான்தான், போட்டிருக்கும் சட்டை மட்டும் என்னுடையது இல்லை என்பதுபோலிருக்கிறது. சரி ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் எம்எல்ஏக்கள் யாராவது ஒருவராவது, நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. நான் யாரிடமும் பணமோ, நகையோ வாங்கவில்லை என்று மறுத்துள்ளார்களா. இல்லையே.
யாராவது ஒருவராவது என் குலசாமி சத்தியமாக, நான் விலைபோகவில்லை என்று எந்த கோவிலில்லாவது சத்தியம் செய்தார்களா. எதுவும் நடக்கவில்லை. காரணம் எல்லோரும் எல்லாம் பெற்றது உண்மையே. மனசாட்சி உருத்தியதால் இவ்வளவையும் உங்களிடம் கூற வேண்டியது இருக்கிறது என்றார்கள்.
தொடர்ந்து மேலும் ஒரு சிலர், இதை கூறுவதில் வந்து நாங்கள் வெட்கப்பட வேண்டிய சூழல் இல்லை. காரணம், ஏற்கனவே நாங்கள் செலவு செய்துள்ளதைத்தான் வாங்கியிருக்கிறோம். சரி இதோடு விட்டுவிட முடியுமா என்றால் இல்லை.
காரணம் எங்களுக்கு மாதா மாதாம் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த ஆட்சி இன்னும் சில காலத்திற்கு இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு இருக்கிறோம். ஆகவேதான் எல்லோரின் வாய்களையும் நாங்களே பூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள்.
எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டது, பணம் பெற்றது பற்றி சுயேட்சை எம்எல்ஏவான கொங்கு பேரவை மு.தனியரசுவிடம் நாம் கேட்டதற்கு, எம்எல்ஏ சரவணன் என்ன கருத்து கூறியிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது.
நான் இரண்டு, மூன்று நாட்களாக பல வேலைகளில் இருந்தேன். அவர் கூறிய கருத்தை முழுமையாக கேட்டுவிட்டுத்தான், நான் கருத்து கூட முடியும் என பட்டும் படாமலும் பேசி முடித்துக்கொண்டார்.