சசிகலாவின் கருத்தை தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அ.ம.மு.க.வில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் வந்து இணைகிறார்கள். கூடிய விரைவில் அ.ம.மு.க. என்ற கட்சி இருக்காது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் இன்று கையெழுத்து போட்டு விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை மீட்டு எடுப்பேன் என்று சசிகலா கூறி இருக்கிறார். சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் ஒருபோதும் இடமில்லை. பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சசிகலா நினைக்கிறார். டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளன.
சசிகலாவின் கருத்தை தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை. அவர் கூறுவதை உதாசீனப்படுத்தும் கருத்தாகத்தான் அனை வரும் பார்ப்பார்கள். அவர் கூறும் கருத்து பெரிய அளவில் தாக்கமும் ஏற்படுத்தாது.
அ.ம.மு.க.வில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் வந்து இணைகிறார்கள். கூடிய விரைவில் அ.ம.மு.க. என்ற கட்சி இருக்காது. தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் பணத்தை வைத்து மட்டும் அரசியல் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.