சகோதரியும் பிள்ளைகளும் இரத்த வௌ்ளத்தில் கிடந்தனர்!- குமாரபுரம் 26 பேர் படுகொலை வழக்கில் சாட்சியம்
இவ்வாறு திருகோணமலை கிளிவெட்டியில் உள்ள குமாரபுரம் பொதுமக்கள் 26 பேர் படுகொலை தொடர்பாக சாட்சியமளித்த இருபிள்ளைகளை இச்சம்பவத்தில் பறி கொடுத்த தாயான சுந்தரலிங்கம் இருதயராணி (50) தெரிவித்தார்.
இவ்விசாரணைகள் கடந்த 27ம் திகதி திங்கட்கிழமையில் இருந்து அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக நடைபெற்ற விசாரணைகளின் போதே மேற்படிசாட்சி சாட்சியங்களை வழங்கினார்.
1996.02.11ம் திகதி இரவு நடைபெற்ற இந்த படுகொலையை மேற்கொண்டதாக எட்டு இராணுவத்தினர் மூதுார் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் இனம் காணப்பட்டனர்.
இச்சமயம் பாதிக்கப்பட்ட 120 பேர் வரை உடன் சாட்சியங்களை வழங்கி குறித்த படையினரை இனம்காட்டியிருந்தனர்.
20 வருடங்களின் பின்னர் இவ்வழக்கு அனுராதபுரம் மேல்நீதிமன்றில் ஏழு யூரிகள் முன்நிலையில் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இதற்கான சாட்சிகளை மூதுார் பொலிசார் நெறிப்படுத்தி ஆஜார் செய்து வருகின்றனர்.
சம்பவங்களை நேரில் கண்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களென இருபதுபேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அவர்களில் நால்வர் இயற்கை மரணமானதால் 16பேரே ஆஜாராகிருகின்றனர்.
இவர்களில் ஐந்து நாட்களில் 14 பேர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். படையினர் தரப்பில் எட்டு எதிராளிகளில் இருவர் இறந்த நிலையில் 6 பேர் மட்டுமே விசாரணைகளில் முன்நிலைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களில் மூவரை நீதிமன்றில் வைத்து தமது உறுவினர்களைச் சுட்டதாக சாட்சிகள் இனம்காட்டியுள்ளனர்.
இங்கு தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் சாட்சியமளித்த இருதயராணி குறிப்பிடுகையில்,
நான் குமாரபுரத்தை பிறப்பிடமாக கொண்ட போதும் பள்ளிக்குடியிருப்பில் திருமணம் முடித்து அங்கு தான் வாழ்ந்து வந்தேன்.
சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குமாரபுரத்தில் உள்ள எனது தாயார் வீட்டிற்கு வந்தேன்.
சம்பவமம் நடந்த வேளை மாலை வெடிச்சத்தம் கேட்டது. அப்போது பலரும் சொன்னார்கள் ரோந்து செல்லும் கிளிவெட்டி முகாம் படையினர் கொக்கு சுடுவது வழமை. இப்பவும் அவர்கள் தான் சுடுகிறார்கள் போல எனத் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் வெடி கேட்பதற்கு பல மணி நேரத்திற்கு முன்னர் எனது சகோதரியான பாக்கியவதியின் வீட்டிற்கு எனது பிள்ளைகளான சு.பிரபாகரன்(12) மற்றும் சு.சுபாஜினி(4)யும் கணவர் சித்திரவேல் சந்தரலிங்கமும் சென்றிருந்தனர்.
வெடிச்சத்தம் மாலை 4.00 மணியளவில் கேட்ட நிலையில், நாங்கள் இருந்த இடத்திலேயே இருந்து விட்டோம்.
மறுநாள் காலை 7.00மணியிருக்கும். நான் கேள்விப்பட்டு எனது சகோதரியின் வீட்டிற்கு சென்று பாரத்த போது எனது இருபிள்ளைகளும் சகோதரியும் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
ஆனால் இவர்களை யார் சுட்டார்கள் என்பதனை நான் நேரடியாகப் பாரக்கவில்லை. இராணுவத்தினர் தான் புகுந்து சுட்டதாக கண்டவர்கள் சொன்னார்கள்.
இந்த சம்பவத்தில் எனது கணவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது, அதனை சுகப்படுத்திய போதும் நான்கு வருடங்களில் அவரும் இயற்கையாக இறந்து விட்டார் என விபரித்தார்.
இவர் சாட்சியமளிக்கையில் சுமார் 12.30 மணியளவில் நீதிமன்றில் மயங்கி விழுந்ததனால் நீதிமன்றில் பரபரப்பாகியது.
ஆயினும் பின்னர் அரைமணித்தியாலத்தல் சாட்சியத்தை அவர் தொடர்ந்து வழங்கியிருந்தார்.
குறித்த படையினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் வரும் திங்கள் தொடரும் என பொலிசார் தெரிவித்தனர்.