அரசியலில் பல ஆண்டுகளாக பகைத்துக் கொண்டிருந்த ராஜபக்ஷர்களும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணையும் போது கொள்கை ரீதியில் வேறுப்பாடுகள் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் ஒன்றிணைய கூடாது. சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து மனிதநேய கூட்டணியை ஸ்தாபிப்போம் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களுக்கும்,ஐக்கிய குடியரசு முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (27) மாலை கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
மனிதநேயமிக்க அரசியல் கூட்டணி ஒன்றை ஸ்தாபிப்பதற்குச் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.ஐக்கிய தேசியக் கட்சி,சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
சகல தரப்பினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பது பிரதான இலக்காகும்.அரசியலில் கீரியும்,பாம்பும் போல் பல ஆண்டுகாலமாக பகைத்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்,மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்துள்ளார்கள். இவர்களால் ஒன்றிணைய முடியுமாயின் ஏன் கொள்கை ரீதியில் மாத்திரம் வேறுபாடு கொண்டுள்ள தரப்பினரால் ஒன்றுபட முடியாது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.