2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பிரிவு மற்றும் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடியபோது எதிர்தரப்பின் உறுப்பினர் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பரீட்சை வினாதாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டு 3 மாத காலத்திற்கு பிறகு தான் அடுத்த பரீட்சை நடத்தப்பட வேண்டும் இல்லாவிடின் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக முடியாது.
உயர்தரத்தில் 17 பாட பிரிவகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மட்டத்தில் பரீட்சை தொடர்பான அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்கள் ஊடாக ஆகஸ்ட், ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மூன்று மாத காலப்பகுதியில் வகுப்பறை மட்டத்தில் விசேட கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தாக்கத்தினாலும்,தற்போதைய நிலைவரத்தினாலும் பாடசாலை மூடப்பட்டுள்ளதால் ஆரம்ப பிரிவு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நிலைமை எந்த மட்டத்தில் உள்ளது என்பதை பிரதேச மட்டத்தில் மதிப்பீடு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபபட்டுள்ளன. விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் இரத்தாகியுள்ள பாடசாலை நாட்களை எவ்வாறு சமநிலைப்படுத்தி, பாடசாலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.
ஆரம்ப பிரிவு மற்றும் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக காலத்தை நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.