இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சதம் அடிப்பது இப்போது வாடிக்கையாக போய் விட்டது என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இன்னாள், முன்னாள் வீரர்கள் ‘டுவிட்டர்’ மூலம் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா): மைதானத்தில் இறங்கி, சதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து இதே போன்று ரன் குவியுங்கள்.
வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா): அணி நெருக்கடிக்குள்ளான நிலையில், மிக பக்குவமாகவும், பொறுப்புணர்வுடனும் விளையாடினார். நான் பார்த்த சிறந்த ஒரு நாள் போட்டி சதங்களில் இதுவும் ஒன்று.
சுரேஷ் ரெய்னா: இந்தியாவின் ‘ரன் எந்திரம்’ மீண்டும் ஒரு முறை சதம் அடித்துள்ளார். என்ன ஒரு அற்புதமான வீரர்.
ஜாவித் மியாண்டட் (பாகிஸ்தான்): எதிரணி பந்து வீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை வெகுசீக்கிரமாவே புரிந்து கொண்டு செயல்படுகிறார், கோலி. உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, கிரிக்கெட்டில் ஒரு மேதை.
மைக்கேல் வாகன் (இங்கிலாந்து): கோலி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது வியப்புக்குரியது. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அவரை மிகச்சிறந்த வீரராக கருதலாமா?
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு (49 சதம்) அடுத்த இடத்தில் விராட்கோலி (34 சதம்) உள்ளார்.