முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரை கைதுசெய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாற்காலியில் அமரும் முன்னர் கூறியவைகளை அமர்ந்த பின்னர் செய்வதில்லை.
பிரதமர் உட்பட அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் கூறியவற்றை ஆட்சியை பிடித்த பின்னர் செய்வதில்லை. மைத்திரிபால பதவிக்கு வரும் போது என்ன கூறினார்?. பொது வேட்பாளர் என்ற வகையில் தனக்கு கட்சி இல்லை என்றார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறினார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியை விட்டு விலகி பொலன்நறுவைக்கு சென்று உழவு தொழில் செய்ய போவதாக தெரிவித்தார்.
இப்போது கட்சி ஒன்றை பற்றி பிடித்துக்கொண்டு, நீல நிற சட்டை அணிந்து, எத்தனை வருடங்கள் ஆட்சியில் இருக்கலாம் என உயர்நீதிமன்றத்திடம் கேட்கிறார்.
உயர் நீதிமன்றமும் சரியான பதிலை வழங்கியது. முடியாது என்று கூறியது. நாங்கள் அந்த முடிவு குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட போது மைத்திரிபால சிறிசேன என்ன சொன்னார்?
பதவிக்கு வந்ததும் விமான நிலையத்தை மூடுவேன், திருடர்கள் தப்பிச் செல்ல இடமளிக்க போவதில்லை என்று கூறினார். இரண்டு நாட்களில் பசில் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். திருடர்களை பிடித்தார்களா?
மைத்திரிபால சிறிசேன திருடர்களை பாதுகாத்தார். மகிந்தானந்த அளுத்கமகேவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு என சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அறிவித்திருந்தது. மைத்திரிபால சிறிசேன கைதுசெய்ய வேண்டாம் என்றார்.
இப்படி செய்தவர் திருடர்களை பிடித்ததாக தற்போது கூறுகிறார். கோத்தபாய ராஜபக்ச 910 லட்சம் செலவழித்து தனது தாய், தந்தைக்கு மயானம் கட்டினார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்து, வாக்குமூலத்தை பெற்று, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் , நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கடிதம் அனுப்பியது.
என்ன நடந்தது?. மைத்திரிபால சிறிசேன, வேண்டாம் என்று கூறினார். இவர்கள் எவரும் திருடர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரும் நண்பர்கள் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.