அரச நிர்வாகம், கொள்கைகள் தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முரண்பாட்டு நிலைமை மிக விரைவில் வெளிப்படையாக வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
தற்போதைய நெருக்கடி நிலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் சில தீர்மானங்களை கணக்கில் கொள்ளாது ஜனாதிபதி செயற்படுவதாகவும் அதனால் இந்த முரண்பாட்டு நிலை தோன்றியதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் நலன் சார் திட்டங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையே போட்டியும், ஒருவரை ஒருவர் விஞ்சி செயற்பட முனைவதும் முரண்பாடுகளை வலுப்படுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
அண்மையில் ஜனாதிபதி, நாட்டின் சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை துறைசார் அதிகாரிகளுடன் நடாத்தியதாகவும் அதன்போது ஜனாதிபதியால் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த கலந்துரையாடலின் பின்னர் இரு நாட்களுக்குள் அதே அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடல் நடாத்தியுள்ள பிரதமர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய ஆலோசனைகளில் பரஸ்பர வேறுபாடுகள் இருந்துள்ள நிலையில், அதிகாரிகள் எதனை பின்பற்றுவது என குழம்பிப் போயுள்ளதாக, அரச உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டின் பின்னரான நல்லாட்சி அரசாங்க காலத்திலும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணிலுக்கு இடையே அரச நிர்வாகம் தொடர்பில் மோதல்கள் வலுப்பெற்றதால், குறித்த அரசாங்கம் தோல்வியடைந்தமை விஷேட அம்சமாகும்.