‘கோப்26’ கிளாஸ்கோ மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறும் தமிழர் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி ஸ்கொட்லாந்திலும் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ‘கோப்26’ கிளாஸ்கோ மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார்.
அவரது வருகைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஸ்கொட்லாந்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் முன்பாக ஆர்ப்பாட்டம்
‘கோப்26’ கிளாஸ்கோ மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் டன்பிளேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு முன்னாள் நேற்றுக்காலை பெரும் எண்ணிக்கையில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் கோட்டாபய ராஜபக்ஷவின் வகிபாகத்திற்காக அவரைக் கைதுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘இனப்படுகொலையை நிறுத்து’ என்று கோஷமிட்டவாறு மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அநேகமானோர் பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு வருகைதந்து குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘இந்தப் போர்க்குற்றவாளி எம்மிடமிருந்தோ அல்லது நீதிநிலைநாட்டப்படுவதிலிருந்தோ தப்பித்துக்கொள்ளாமல் இருப்பதை நாம் உறுதிசெய்வோம்’ என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
அதனையடுத்து அங்கு வருகைதந்த பெருமளவான பொலிஸ் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவர் ஒரு போர்க்குற்றவாளி என்றும் குறிப்பிட்டனர். ‘இம்முக்கிய மாநாட்டில் அனைத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவேண்டும் என்றே விரும்புகின்றோம். இருப்பினும் இனப்படுகொலைக்கான நீதியும் காலநிலை மாற்றம் தொடர்பான நீதியும் பிரிக்கப்படமுடியாதவையாகும்’ என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பிரான்ஸில் கவனயீர்ப்பு போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பிரான்ஸில் உள்ள ஸ்ராஸ்பேர்க் நகரில் புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘தமிழர்கள் இனப்படுகொலைகள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படவேண்டும்’, ‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்
அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன்னால், தமிழர் இனப்படுகொலைகள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் போராட்டக்காரர்கள் கோட்டாபய ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவும் கைதுசெய்யப்படுவதுடன் அவர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவேண்டும், தமிழர் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை அனைத்து நாடுகளும் வலியுறுத்தவேண்டும், இலங்கையில் தமிழர்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாப்பதற்கான தீர்வாக தமிழ் ஈழம் அமையவேண்டும் என்ற மூன்று பிரதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம்
‘கோப்26’ மாநாட்டில் கலந்துகொள்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தைக் கண்டித்து கடந்த 29 ஆம் திகதி பெல்ஜியத்திலுள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.