இறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இறுதி யுத்தத்தின்போது யுத்த முடிவிலே இடைவிடாது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை நெரிப்படுத்தியவர் கோட்டாபய ராஜபக்ஷவே. அவர் தற்போது சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆகும். 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டாம் உள்ளக விசாரணை போதும் என்று கூறியதோடு, தற்போது மேலும் இரு வருடங்கள் இலங்கைக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்துள்ளார்கள். இவர்களின் இவ்வாறான செயற்பாடே கோட்டாபய தேர்தலில் போட்டியிட பிரதான காரணமாகும்” என மேலும் தெரிவித்தார்.