கொழும்பு நகரை லண்டனை போன்று மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் தொழில்நுட்ப புரட்சிக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதமரின் வாக்குறுதிக்கமைய இலவச இணைய வசதியை வழங்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்திற்கு அமைய கொழும்பு நகரை முழுமையாக இணைக்கும் வகையில் 100 வைபை மையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதற்பகுதியாக 20 வைபை வலையமைப்புகளை ஏற்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்பொழுது கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான வைபை வலையமைப்புகள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது வைபை சேவை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில், கையடக்க தொலைபேசி சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சாதாரண குப்பைகளை சேகரிக்கும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சுற்று சூழலுக்கு நெருக்கமான வைபை இயந்திரங்கள் அமைப்பதே இதன் ஆரம்ப நோக்கமாகும்.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக கொழும்பு நகரில் ஏனைய 80 வைபை வலையமைப்புகள் பொருத்தமான இடத்தில் பொருத்தப்படவுள்ளது. அத்துடன் மாத்தறை காலி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய நகரங்களில் இதனை செயற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.