‘நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்’ என்ற தொனிப்பொருளிலில் சோசலிச இளைஞர் அணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு துரித தீர்வினை வழங்கி வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு , பௌத்த மதகுரு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஆக்கிரோஷமாக தாக்க முற்பட்டார். இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது.
‘எரிபொருள் வரிசை வேண்டாம்’ , ‘இந்தியாவிற்கு வழங்கிய எண்ணெய் தாங்கிகளையும் , அமெரிக்காவிற்கு வழங்கிய யுகதனவி மின்நிலையத்தையும் மீளப்பெறு’ உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் பிரதான கோரிக்கைகயாகக் காணப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மருதானை – டெக்னிகல் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக செல்லவுள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதன் காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டு ஒரு மணித்தியாலயத்திற்கும் அதிக நேரம் அங்கு அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்
‘இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்’ , ‘நாம் இளம் பலசாலிகள்’ , ‘தாய் நாட்டை பாதுகாப்பது எமது பொறுப்பு – எமது பொறுப்பை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளி’ , ‘பொறுப்பை நிறைவேற்ற எம்முடன் ஒன்றிணையுங்கள்’ , ‘பொறுப்பற்ற தலைவர்கள் எமது நாட்டை விற்கின்றனர்’ , ‘இலஞ்சத்தை பெற்று வெளிநாட்டு சுற்றுலா செல்கின்றனர்’ , ‘யுகதனவி, எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறு’, ‘உண்பதற்கு வழியில்லை – எரிபொருள் வரிசைக்கு முடிவில்லை’ என்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று முற்பகல் மருதானை டெல்னிகல் சந்தி வீதி, புறக்கோட்டை புகையிரத நிலைய வீதி மற்றும் ஜனாதிபதி செயலக வளாக வீதி என்பவற்றின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
அத்தோடு லோட்டஸ் சுற்று வட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் ஊடாக பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரைப் போன்று வேடமிட்டு சென்றதோடு , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இலட்சினையையும் எடுத்துச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டமையினால் அங்கு பதற்றமற்ற நிலைமை ஏற்பட்டது.
எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்படவில்லை என்றும் , அங்கு பதற்றமான சூழல் மாத்திரமே உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.