கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சிற்கு (Ministry Of Health Sri Lanka) முன்பாக இன்று (24) இணை சுகாதார பட்டதாரிகளால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக நுண்ணறிவு அளவுகோல் பரீட்சையை நடத்தும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
சுகாதார சேவை வெற்றிடங்கள்
மேலும் சுகாதார சேவைக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இணை சுகாதார பட்டதாரிகளுக்கு உடனடியாக சேவைப்பயிற்சி வழங்கு, இலவசக் கல்வியை விலைபேசும் கொத்தலாவல பல்கலைக்கழகங்களின் இணை சுகாதார பட்டத்தை அரச சேவை அங்கீகரிக்கும் அராஜகத்தை நிறுத்து, நியாயமற்ற தேர்வு பரீட்சை முறையை நிறுத்து ஆகிய வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் டிப்ளோமாவை நிறைவு செய்தவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதேவேளை போராட்டம் இடம்பெற்ற குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.