கொல்லப்பட்டதாக கருதப்படும் குறைந்தது 10 பெண்களின் உடற்பாகங்களை கடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தம்பதியொன்று தொடர்பாக மெக்ஸிகோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இழுவை வண்டியொன்றில் குறித்த மனித உடற்பாகங்களின் ஒரு தொகுதி இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆண், மெக்ஸிகோவின் புறநகர் பகுதியில் 20 பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த தம்பதிகள் தங்கியிருந்த மாடிக் குடியிருப்பு மற்றும் அருகில் இருந்த பிறிதொரு ஸ்தானத்தில் இருந்து விசாரணையாளர்கள் இந்த மனித உடற்பாகங்களை கண்டெடுத்துள்ளனர்.
அவை சீமெந்தால் நிறப்பப்பட்ட வாளிகள், இழுவை வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணிகள் தமது சந்தேகங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
மனித உடற்பாகங்கள் யாருக்கேனும் விற்பனை செய்யப்படுவதற்காக இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் யாருக்கு என்பது உறுதியாக கூற முடியாதுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்கள் பரவலாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் மெக்ஸிகோவில் பரலாக இடம்பெறுகின்றன. ஆனால் அவ்வாறான வன்முறைகளுக்கு பெரும்பாலும் தண்டனைகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
இந்த வழக்கின் கொடூரமான விவரங்கள் மெக்ஸிகோ மக்களின் சீற்றத்தை தூண்டியுள்ளன அத்துடன், எக்காடெபெக்கில் வீதி ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய தம்பதி இழுவை வண்டியொன்றில் கனமான பொருட்களை இழுத்துச் சென்றதை பார்த்ததாக அயலவர்கள் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். அந்த வண்டியையே பொலிஸார் பின்னர் கைப்பற்றியுள்ளனர்.
உள்ளூர் பெண்மணியான, 28 வயது மதிக்கத்தக்க நான்சி ஹய்ட்ரோன் மற்றும் அவரது இரண்டு மாத குழந்தை, வாலண்டினா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதத்தில் காணாமல் போனதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் தமது விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்குரிய இருவரை பின்தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.