கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வழங்குவதற்காகப் பல தனியார் மருத்துவமனைகள் நியாயமற்ற விதத்தில் கட்டணங்களை வசூலிக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறான வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றபோது தாம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு எந்த சிகிச்சையும் வழங்கப்படாத போதும் அவர்களிடம் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது பெரும் தொகை கட்டணம் அறவிடப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியர்கள் நோய் குணமடைந்தவர்களை மருத்துவமனையை விட்டு வெளியேறப் பரிந்துரைக்கும் போதிலும், சில தனியார் மருத்துவமனைகள் பல்வேறு காரணங்களைக் காட்டி நோயாளிகளைப் பல நாட்கள் நிறுத்தி வைத்திருக்கின்றனர் எனவும் அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
சில தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற மோசடி செயற்பாடுகள் தொடர்பில் அரசு உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு கடுமையான நோய்த் தொற்றுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், மக்களை நெருக்கடிக்கு இட்டுச்செல்ல முயற்சிக்கும் இவ்வாறான தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முஜிபுர் ரஹ்மான் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.