கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஒட்டு மாத்தமாக அனைத்தையும் முடக்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.
சபையின் 39வது மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் தொடர்ந்து தலைமை உரையாற்றிய தவிசாளர் நழீம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதன் தாக்கம் ஏறாவூர் நகர பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.
பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் என்பனவற்றோடு ஆன்மீக வணக்க வழிபாடுகளையும் முடக்கியுள்ளது.
இதனால் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
பயணக்கட்டுப்பாடு அன்றாட இடம்பெயர் கூலித் தொழிலாழி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது.
எமது பிரதேசத்தில் கொவிட் மரணங்கள் நிகழ்வதையும், தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதையும் வைத்து பொதுமக்கள் இத்தருணத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும்.
பிரதேச கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நகர சபையால் ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களின் ஊடாக பொதுமக்களுக்கான சேவைகளையும் நிவாரணங்களையும் வழங்கி வருகின்றோம்.
பயணக்கட்டுப்பாடு காலங்களில் பொதுமக்களின் வீடுகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கு நடமாடும் விற்பனை முறைமைகளை அனுமதித்து முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
நாம் எமது குடும்பத்தாரைக் கவனிப்பது போல இரவு பகல் பாராது இந்த நகர பிரதேச மக்களைக் கவனித்து சேவையாற்றி வருகின்றோம் – என்றார்.