இயக்குனர் லிங்குசாமி சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான காப்பகம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதனை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
‘ஆனந்தம்’ என்ற குடும்ப உறவுகளின் மேன்மையை மையப்படுத்திய திரைப்படத்தை இயக்கி, முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குனர் லிங்குசாமி. காவிரி மண்ணில் பிறந்து, ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ என தொடர்ந்து திரைக்காவியத்தை படைத்து வரும் இவர், திரையுலகில் அறிமுகமாகி இருபது ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்திருக்கிறார். டிஜிற்றல் செல்லுலாய்டில் இலக்கிய படைப்புகளை செதுக்கி வரும் இவர், கவிஞராகவும், கவிதையை நேசிப்பவராகவும், இலக்கியப் படைப்பாளியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்பவர்.
‘இயக்குனர் சிகரம்’ கே பாலச்சந்தர்,’ படைப்பாளிகளுக்கு சமூக பொறுப்புணர்வு இருக்க வேண்டும்’ என அடிக்கடி வலியுறுத்துவார்.
அவரை தன்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமி, ‘கொரோனா நோயாளிகளுக்கான காப்பகம்’ ஒன்றை சென்னையை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் தொடங்கியிருக்கிறார். இவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான கீர்த்தி சுரேஷ் சிறப்பு அதிதியாக பங்குபற்றி சிறப்பித்த இந்நிகழ்வில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இந்த காப்பகத்தை திறந்து வைத்தார்.
இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.