சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் நிவாரண நிதியாக 50 இலட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினை முதல் முறையாக நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றதற்காக ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது…
‘கொரோனாவை தடுக்கும் விதமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.’ என்றார்.
கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு தரப்புகளிலிருந்து தமிழக அரசுக்கு நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர் அஜித்குமார் 25 இலட்சம் ரூபாவும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி தலா பத்துலட்சம் ரூபாவும், இயக்குனர் ஷங்கர் 10 இலட்சம் ரூபாவும் மற்றும் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடியும் என பலரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 இலட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.