கொரோனா பெருந்தொற்றால் வீட்டிற்குள்ளேயே நாட்களை கடத்தும் நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅழுத்தமும் அதனால் உருவாகும் சச்சரவுகளால் குடும்ப அமைதி குலைந்து விடக்கூடிய சூழலும் ஏற்படக்கூடும்.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்றோர் பணிக்கு செல்வதும் பிள்ளைகள் பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு செல்வதும், முதியோர்கள் வீட்டின் இதர பணிகளை கவனித்து கொள்வதுமாக வாழ்க்கை நகர்ந்தது.
ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறி, அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே நாட்களை கடத்தும் நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு மன அழுத்தமும் அதனால் உருவாகும் சச்சரவுகளால் குடும்ப அமைதி குலைந்து விடக்கூடிய சூழலும் ஏற்படக்கூடும். அத்தகைய நிலையை தவிப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
பணிகளை அதற்குரிய நேரத்துக்குள் செய்து முடியுங்கள்..
அலுவலகத்திலிருந்து பணிகளை செய்யும் போது மாலை 6 மணிக்குள் அனைத்து கடமைகளையும் முடித்து விட்டு கிளம்பி விடுவோம். ஆனால் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் போது முறையான கால அவகாசம் என்பது இல்லாமல் நீண்ட நேரம் கணினி முன்பாக அமர்ந்திருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அது பல விதங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பணி காரணமாக குடும்பத்தினருடன் அன்பாக பேச இயலாதது, மன அழுத்தம், பணியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலாதது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உடனுக்குடன் பணியை முடிக்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
அவ்வப்போது உடலுக்கு அசைவு முக்கியம்
தொடர்ச்சியாக பணிகளுக்கு இடையில் அவ்வப்போது அர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சற்று தூரம் நடக்கலாம். அல்லது 5 நிமிட நேரம் மற்றவருடன் பேசலாம். குறிப்பாக குழந்தைகளுடன் சிரித்து பேசுவது புன்னகையோடு பேசுவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.
வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வீட்டில் இருப்பதால் இல்லத்தரசிகளுக்கும் வீட்டில் உள்ள பெண்களுக்கும் வழக்கமான சமையல் பணிகளுடன். இனிப்புகள் மற்றும் நொறுக்கு தீனிகள் தயாரிப்பு என்று வேலைப்பளு அதிகமாகக்கூடும். சமையல் வேலை என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று நினைக்காமல் வீட்டில் உள்ளவர்களும் அதில் பங்கு எடுத்து கொள்ள வேண்டும். சிறுவர் சிறுமிகளுக்கும் சிறிய வேலைகளை பகிர்ந்தளிக்கலாம். இது குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கத்தையும் பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும்.
வீட்டிற்குள் விளையாட்டு
தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கான பாடங்கள் முதல் விளையாட்டு வரை எல்லமே ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மொபைல் போனையே உற்று நோக்குவது, உடல் அசைவுகள் எதுவும் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சகைள் உருவாகலாம். வெளியிடங்களுக்கு விளையாட செல்வதும் நடைமுறைக்கு ஒத்து வராது. அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்குள்ளேயே ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். குறிப்பாக பாடல்கள் பாடுவது, ஆடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது அனைவரிடமும் மகிழ்ச்சிபெருக்கெடுத்து ஆரோக்கியம் சீராகும்.
மனநலம் முக்கியம்
வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வில் இருந்து விடுபட சிறிய தோட்டம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதற்காக நிறைய இடவசதி வேண்டியதில்லை. ஜன்னல் ஓரத்தில் சிறிய டப்பாவில் மண்ணை நிரப்பி அதில் புதினா, கொத்தமல்லி, போன்ற செடிகளை எளிமையான வளர்க்கலாம். பசுமையான செடி, கொடிகளை வளர்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது மற்றும் அதன் வளர்ச்சியை அனைவரும் கவனித்து வருவது போன்றவற்றால் குடும்ப அங்கத்தினர்களுக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும்.