இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை பயணத் தடை தொடர வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் கொரோனாப் பாதிப்புகள் இன்னும் குறைவடையாத நிலையில், தற்போது அமுலில் உள்ள பயணத் தடை மற்றும் ஏனைய சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் அவ்வாறே பேணப்பட வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள போதும் நாட்டின் நலன் கருதி இதனை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்குமானால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்வடையக் கூடும். அத்தோடு சுகாதாரத் துறையும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.
கொரோனாத் தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – என்றார்.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதிக்குப் பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கொரோனாத் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.