டெல்லி கல்யாண் பானர்ஜி கிளினிக் மருத்துவர்கள், உளவியல், மன நல பிரச்சினைகள் காரணமாக தற்போது சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் மனித வாழ்க்கையையே தடம் புரளச்செய்து விட்டது. பெருந்தொற்று தாக்கத்தாலும், அதில் இருந்து மீண்டாலும் பல்வேறு பிரச்சினைகளால் ஒருபக்கம் அல்லாடுகிறார்கள். மற்றொரு பக்கம் சிலர் கொரோனாவால் தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவிக்கிறார்கள். ஊரடங்கு, பொதுமுடக்கம் போன்றவற்றால் வருமான இழப்பால் அவதிப்படுகிறார்கள். வேலை வாய்ப்பின்மையால் சிலர் அல்லலுறுகிறார்கள்.
இப்படி பிரச்சினைகளின் நெரிசல், மனிதர்களுக்கு உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல்வேறு பிரச்சினைகளை சங்கிலித்தொடர்போல ஏற்படுத்தி விடுகிறது.
கொரோனாவின் 2-வது அலையால் பெரும் பாதிப்புக்கு ஆளான தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனாவாலும், அதன் நிமித்தமான கட்டுப்பாடுகளாலும், அதிர்ச்சியாலும், இன்ன பிற பிரச்சினைகளாலும் மனச்சோர்வு, பீதி, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும், கிளினிக்குகளிலும் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி பி.எல்.கே. ஆஸ்பத்திரியின் மனநல மருத்துவ ஆலோசகர் மணிஷ் ஜெயின் கூறுகையில், “சோகம், தனிமைப்படுத்துதல், தங்களுக்கு அன்பானவர்களை இழந்து விடுவோமா என்ற பயத்தினால் ஏற்படுகிற துக்கம், வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்காக வருகிறவர்களின் எண்ணிக்கை 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது” என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “ஏற்கனவே மனநல பிரச்சினை உள்ளவர்கள், தொற்றுநோயின்போது, மேலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். வாழ்வில் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள், கொரோனா பயம் போன்றவை மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” எனவும் தெரிவித்தார்.
டெல்லி கல்யாண் பானர்ஜி கிளினிக் மருத்துவர்கள், உளவியல், மன நல பிரச்சினைகள் காரணமாக தற்போது சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த கிளினிக்கிற்கு மட்டுமே இப்படிப்பட்ட மனநல பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.
கொரோனா காலத்துக்கு முன்பாக சராசரியாக 1,750 மருந்து சீட்டுகள் எழுதித்தரப்படுவது, இப்போது 2,500 ஆக உயர்ந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, பீதி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைக்கு ஆளாகியவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள், ஊரடங்கால் பாதிக்கப்படாதவர்கள்கூட இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்களாம்.