நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது.
தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அப்புறுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் சில பிரதான வைத்தியசாலைகளில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தகனசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால் அங்கு ஏற்படுகின்ற நெருக்கடி நிலையே இதற்கான காரணம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக நாளாந்தம் 70 – 90 வரையிலான கொவிட் மரணங்கள் பதிவாகிவருகின்றன. கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் அல்லது அடக்கம் செய்ய வேண்டும்.
தகனம் செய்வதாயின் அதற்கான தகனசாலை அத்தியாவசியமாகும். தகனசாலைகளுக்கு கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மாத்திரமின்றி , ஏனைய காரணிகளால் உயிரிழப்பவர்களின் சடலங்களும் கொண்டு வரப்படும்.
இதன் காரணமாக தகனசாலைகளில் ஏற்பட்ட நெறிசலே கடந்த சில தினங்களாக வைத்தியசாலைகளில் சடலங்கள் குவியக் காரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய , பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் சகல நகரசபை மற்றும் பிரதேசசபை தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பொலிஸாரையும் இணைத்து சடலங்களை இரு தினங்களில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடருமானால் சுகாதார கட்டமைப்பு வெகு விரைவில் வீழ்ச்சியடையும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே தீவிர நிலையற்ற தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்க தயாராக உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார கட்டமைப்பு சரிவடைந்தால் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மந்த நிலை ஏற்படும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
எனவே தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு துரிதமான தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினதும் , சுகாதார தரப்பினரதுமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news