மழைநீர் தேங்கும் வகையிலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் உள்ள இல்லங்கள் கணக்கெடுக்கப்பட்டு பொருள்களை அப்புறப்படுத்தி, கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று, அபராதம் விதிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை இணைந்து இன்று ராயபுரம் மண்டலம் புதுப்பேட்டையில் மார்க்கெட் பகுதிகளில் மேற்கொண்ட டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, 14 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 11 கையால் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 2 வாகனம் மூலம் புகைப்பரப்பும் இயந்திரங்கள், தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியாளர்கள், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ள துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, டெங்கு விழிப்பு உணர்வுப் பேரணியில் கலந்துகொள்ளும் டெங்கு கொசு போன்று மாறுவேடமிட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்துபவர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோரிடம் பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதம் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும், வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தேவையற்ற பொருள்களான டயர், தேங்காய் ஓடுகள், தண்ணீர்த் தொட்டிகள், ஆட்டுக்கல், உரல், மூடப்படாத டிரம்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த வாகன உதிரிப் பாகங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீர் மூலம் உற்பத்தியாகும் கொசுப்புழுக்கள் குறித்தும், அதன் வாழ்க்கை சுழற்சி முறை குறித்தும் எடுத்துக் கூறி அதைத் தடுத்திடும் முறைகள் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், வியாழக்கிழமைதோறும் டெங்கு ஒழிப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்ற அறிவுரையின்படியும், பெருநகர சென்னை மாநகராட்சியும் பொதுசுகாதாரத்துறையும் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளையும் 2,035 சிறு வட்டங்களாகப் பிரித்து டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மலேரியா தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொதுசுகாதாரத்துறை ஊழியர்கள் என மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கொசுவானது 150-லிருந்து 200 முட்டைகள் இடுகின்றன. இவை 1.5 அல்லது 3 நாள்களில் முட்டைகளாகவும், 6 முதல் 8 நாள்களில் புழுக்களாகவும் (லார்வா), 1.5 அல்லது 3 நாள்களில் பியூப்பாவாகவும், 21 நாள்களில் வளர்ச்சியடைந்த கொசுவாகவும் மாறுகிறது. அதன்மூலம் அவை பல்கிப் பெருகி பல்லாயிரக்கணக்கான கொசுக்களாக உற்பத்தியாகிறது. இதைக் கட்டுப்படுத்திட பொதுமக்கள் தங்களது இல்லங்களில் உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்திட வேண்டும் என இரண்டு முறை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பொருட்படுத்தாமலும், மழைநீர் தேங்கும் வகையிலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் உள்ள இல்லங்கள் கணக்கெடுக்கப்பட்டு பொருள்களை அப்புறப்படுத்தி, கொசு ஒழிப்பு மருந்துத் தெளிக்கும் பணி நடைபெற்று, அபராதம் விதிக்கப்படுகிறது.
முதல் முறையாகக் கண்டறியப்பட்ட இல்லங்களுக்கு ரூ.2,000. இரண்டாவது முறையாகக் கண்டறியப்பட்ட இல்லங்களுக்கு ரூ.5,000. மூன்றாவதாக ரூ.10,000 என அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்து அதன் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது பெருநகர சென்னை மாநகராட்சியின் நோக்கம் அல்ல. இந்தத் தவற்றை மீண்டும் தொடராமல் உணர வேண்டும் என்பதே நோக்கம். பொதுமக்களிடையே டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கொசுக்களை முற்றிலுமாக அகற்றுவதே இதன் நோக்கமாகும். இன்றைய ஆய்வின்போது, உபயோகமற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த டயரில் மழைநீரின் மூலம் லார்வா கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டு, அதன் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தன் தவற்றை உணர்ந்து இதை ஏற்றுக்கொண்டு, இனிமேல் இதுபோல் நிகழாவண்ணம் செயல்படுவேன் என்று தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது இல்லங்கள், தெருக்கள் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகளைக் கொட்டுவதன் மூலம் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றன. அதன் வாழ்க்கை சுழற்சி முறையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அறிவுரைகளின் மற்றும் வழிமுறைகளின்படியே தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால்தான் டெங்கு மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்திட முடியும்” என்று கூறினார்.