அதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினித் திரைகளைப் பார்வையிடுவது ஒருவரது கண்களை மட்டுமல்லாது ஏனைய உடல் செயற்கிரமங்களையும் பாதித்து வாழ்நாளைக் குறைப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள இலாபநோக்கற்ற பக் நிறுவகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் வயோதிபத்துடன் தொடர்புபட்ட நோய்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்கள் தொடர்ந்து ஒளியைப் பார்ப்பது ஏனைய உடல் உறுப்புகளின் நாளாந்த செயற்பாடுகளின் ஒழுங்கைப் பாதித்து உடலில் ஏற்பட்ட நாள்பட்ட நோயை மேலும் மோசமடையச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் ஏனைய உடல் உறுப்புகளைப் போல் அல்லாது வெளி உலகிற்கு பெருமளவில் வெ ளிப்படும் உறுப்பாகக் காணப்படுவதால் அவற்றின் நோயெதிர்ப்பு தன்மை அதிகளவில் செயற்றிறன் மிக்கதாக உள்ளது.
இந்நிலையில் மேற்படி பாதுகாப்பு செயற்றிறனில் ஏற்படும் இடையூறுகள் உள்ளக உடல் செயற்கிரமங்களைப் பாதிப்பனவாக உள்ளன. இதன் காரணமாக உடலின் ஏனைய உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இலத்திரனியல் உலகின் அங்கமாகவுள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகள் உள்ளடங்கலான திரைகள் அளவுக்கதிகமான ஒளியை வெளிப்படுத்துவதன் காரணமாக அவற்றை நீண்ட நேரம் பார்வையிடுவது காலப் போக்கில் மோசமான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கணினி மற்றும் கையடக்கத்தொலைபேசித் திரைகளை இரவு நேரத்தில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அவதானிப்பது ஒளி மாசாக்க நிலையைத் தோற்றுவித்து ஏனைய உடல் உறுப்புகளின் இயக்கம் தொடர்பான சமநிலைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளதாக மேற்படி ஆய்வில் பங்கேற்ற பேராசிரியரும் போஷணை நிபுணருமான மருத்துவ கலாநிதி பன்காஜ் கபாஹி தெரிவிக்கிறார்.