கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ”சில்ப அபிமானி – 2017” சர்வதேச கைப்பணி விழாவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கைப்பணித்துறைக்கு தேவையான வசதிகள், வளங்கள் மற்றும் சந்தை வாய்ப்பினை வழங்கி அத்துறையிலுள்ளோரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசத்தின் பெருமையையும், தனித்துவத்தையும் கொண்டுள்ள எமது பாரம்பரிய கைப்பணித்துறையை அந்நிய செலவாணியை ஈட்டும் துறையாக மாற்றக்கூடிய சாத்தியங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாட்டு சொத்துக்களை அதிகரிப்பதற்காக உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் தெரிவித்தார்.
2017 சர்வதேச கைப்பணி விழாவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி கண்காட்சியையும் பார்வையிட்டார்.
பேண்தகு இருப்புக்காக மரபுசார் கைப்பணித்துறையை போசித்து, பாதுகாக்கும் நோக்குடன் தேசிய கலை பேரவையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கைப்பணித்துறை விழா இன்றிலிருந்து 08 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் சம்பிக்கா பிரேமதாஸ, தேசிய கலை பேரவை தலைவி கேஷானி போகொல்லாகம உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.