உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் . இவ்வாறு சிறையில் உள்ள இளைஞர்களின் விடுதலைக்காக இடம் பெறும் போராட்டம் தாராளம்.
தமிழ் இளைஞர்கள் மாத்திரமின்றி எல்லோராலும் அறியப்பட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகளும் அண்மைகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் கடந்து மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பொற்கேணி பகுதியில் ‘நவரசம்’ எனும் கவிதை நூல் மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தது எனும் சந்தேகத்தின் பெயரில் கடந்த 2020 மே மாதம் 16 கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றனர் அஹ்னப்பின் பெற்றோர்.
27 வயதான அஹ்னப் பேருவளை ஜாமியா நளீமியா கலைப்பீடத்தில் கலை துறை சார்ந்த பாடம் கற்றும் மதுரங்கு தனியார் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய நிலையில் 2017 ஆம் ஆண்டு நவரசம் எனும் கவிதை நூலை வெளியிட்டார்.
கவிஞராக, சிறந்த மேடைப் பேச்சாளராக, எழுத்தாளராக பல பரிமாணங்களில் சிறந்து விளங்கிய அஹ்னாப் நவரசம் நூலின் ஊடாக ஒன்பது உணர்வுகளை மையப்படுத்தியும் 45 கவிதைகள் எழுதப்பட்ட நிலையில் அதில் “உருவாக்கு” என எழுதப்பட்ட ஒரு கவிதையை மையப்படுத்தி ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினால் அஹ்னாப் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மெஹசீன் CRP சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நவரசம் கவிதை தொகுப்பில் தீவிர வாதத்திற்கு எதிரான பல கவிதைகள் எழுதப்பட்ட நிலையில் ISIS தீவிரவாத அமைப்பை கடுமையாக சாடியுள்ளார். அஹ்னாப் தீவிரவாதத்திற்கு எதிராக இருந்த தனது மகனை காரணம் இன்றி கைது செய்துள்ளதாக அஹனா பின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றம், இலங்கை பாராளுமன்ற உட்பட பல இடங்களில் பேசப்பட்டாலும் இதுவரை நடைமுறையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சிறையில் தனது இளமையை அஹ்னாப் தொலைப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தன்னுடைய பிள்ளையை சந்திக்க கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் வாரம் ஒரு முறை 2 நிமிடமே தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைப்பதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எழுத்தாளரான தனது மகன் எந்த வித தீவிரவாத செயற்பாட்டில் அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கும் செயற்பாட்டிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடவில்லை எனவும் எனவே தனது மகன் மாத்திரம் இல்லாமல் அநியாயமாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம் அஹ்னாப் தொடர்பான வழக்கில் தங்களுக்காக தங்கள் பக்கம் செயற்படும் (ACDFAE) கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் பொது அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்து தமது பிள்ளையின் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்த நிலையில் இம் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாகவும் அஹ்னாப் பின் கைது தொடர்பாகவும் WORKING GROUP ON ARBITRARY DETENTION குழுவினர் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.