அமெரிக்கா ஆக்கிரமித்த இரு தசாப்தங்களின் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் விரைவான எழுச்சி அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இது பாதுகாப்பு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தவும் காரணமாக அமைந்துள்ளதுடன், நாட்டின் பரந்த பயன்படுத்தப்படாத கனிம வளத்திற்கு என்ன நடக்கப் போகிறது? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். ஆனால், அதன் பொருளாதார வாய்ப்புகளை வியத்தகு முறையில் மாற்றக்கூடிய கிட்டத்தட்ட 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனிம வளங்களை கொண்டிருப்பதை 2010 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மற்றும் புவியியலாளர்கள் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இரும்பு, செம்பு மற்றும் தங்கம் உள்ளிட்ட அரிதான பூமி கனிமங்களும், விஷேடமாக உலகின் மிகப்பெரிய “இலித்தியம்” இருப்புகளும் ஆப்கானிஸ்தான் மாணாங்கள் முழுவதும் சிதறிக்கிடப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
21 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு உலோகங்கள் அவசியத்தை வலியுறுத்திய சுற்றுச்சூழல் எதிர்காலக் குழுவை நிறுவிய விஞ்ஞானியும் பாதுகாப்பு நிபுணருமான ரோட் ஸ்கூனோவர், ஆப்கானிஸ்தான் பாரம்பரியம் விலைமதிப்பற்ற உலோகங்களில் பணக்காரப் பகுதிகளில் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும் பாதுகாப்பு சவால்கள், உள்கட்டமைப்பின் பற்றாக்குறை மற்றும் கடுமையான வறட்சி ஆகியவை கடந்த காலத்தில் மிகவும் மதிப்புமிக்க கனிமங்களை பிரித்தெடுப்பதைத் தடுத்தன.
இந் நிலையில் தற்சமயம் தாலிபான் கட்டுப்பாட்டில் அது விரைவில் மீள்வதற்கான வாய்ப்பில்லை. இருப்பினும் சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இதற்கான ஆர்வங்கள் இப்பொழுதே எழத் தொடங்கியுள்ளன.
ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவையின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 90 சதவீத ஆப்கானியர்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வறுமை நிலைக்கு கீழே வாழ்கின்றனர். இவர்களின் அன்றாட ஊதியம் 2 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக காணப்படுகிறது.
பல்வகைப்படுத்தல் பாதுகாப்பின்மை, அரசியல் உறுதியற்ற தன்மை, பலவீனமான நிறுவனங்கள், போதிய உள்கட்டமைப்பு, பரவலான ஊழல் மற்றும் கடினமான வணிகச் சூழல் ஆகியவற்றால் பொருளாதாரம் பலவீனமடைந்திருப்பதாக உலக வங்கி மார்ச் மாதத்தில் கூறியது.
பலவீனமான அரசாங்கங்களைக் கொண்ட பல நாடுகள் “வள சாபம்” என்று அழைக்கப்படுகின்றன, இதில் இயற்கை வளங்களை சுரண்டும் முயற்சிகள் உள்ளூர் மக்களுக்கும் உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் நன்மைகளை வழங்கத் தவறிவிட்டன.
அப்படியிருந்தும், ஆப்கானிஸ்தானின் கனிம வளத்தைப் பற்றிய வெளிப்பாடுகள், சோவியத் யூனியனால் முன்னதாக நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் கட்டமைக்கப்பட்டது.
கார்பன் உமிழ்வைக் குறைக்க நாடுகள் மின்சார கார்கள் மற்றும் பிற சுத்தமான தொழில்நுட்பங்களுக்கு மாற முயலும் போது இலித்தியம் மற்றும் கோபால்ட்டு போன்ற உலோகங்கள் மற்றும் நியோடைமியம் போன்ற அரிய பூமி கூறுகளின் தேவை சர்வதேச ரீதியில் அதிகரித்து வருகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள இலித்தியம் இருப்புக்கள் உலகின் மிகப் பெரிய வள கனிம வள இருப்புக்களை கொண்ட பொலிவியாவுடன் ஒப்பிடக் கூடியவை என்று அமெரிக்க அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் சில வருடங்கள் வன்முறைகளை கைவிட்டு அமையாக இருந்தால், அதன் கனிம வளங்களின் வளர்ச்சியை உபயோகப்படுத்துவதற்கு அனுமதித்தால் ஒரு தசாப்தத்திற்குள் ஆப்கான் செல்வந்த நாடுகளில் ஒன்றாக மாறும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது 2010 இல் சஞ்சிகைகளினூடாக தெரிவித்தது.
இந் நிலைலில் தலிபான்கள் ஆகஸ்ட் 15 அன்று காபூலுக்குள் புகுந்து ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கிளர்ச்சிக் குழுவிலிருந்து தேசிய அரசாங்கத்திற்கு மாறுவது நேரடியான விடயமாக இருக்காது.
இதனால் ஆப்கானிஸ்தான் கனிம வளங்களை பயன்படுத்துவதற்கு பல ஆண்டுகள் செல்லலாம்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்தை அகற்றுவதற்கு முன்பு அந்நிய முதலீட்டினை ஈட்டுவது கடினமான விடயமாக காணப்படுகிறது.
இது இவ்வாறிருக்க தலிபான் ஆப்கானின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய பின்னர். ஆப்கானிஸ்தானுடனான நட்பு மற்றும் கூட்டுறவு உறவை வலுப்படுத்த நாம் தயாராக உள்ளோம் என சீனா கூறியது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் பாதையைத் தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்திற்கு உதவவும் தயாராக இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானுடனான (தலிபான்கள்) நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது. தலிபான் செயல்பாட்டை பொறுத்துதான், முடிவு எடுக்கப்படும் என ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் தற்சமயம் ஆப்கானை கட்டுப்படுத்தும் தலிபானியர்கள் சர்வதேச நாடுகளுடன் எவ்வாறு தொடர்பினை பேணுவார்கள் மற்றும் அவர்களுடனான பாதுகாப்பு தொடர்புகளின் நம்பிக்கைகள் போன்ற பல்வேறு காரணிகள் நாட்டின் பரந்த பயன்படுத்தப்படாத கனிம வளத்திற்கு என்ன நடக்கப் போகிறது? என்ற கேள்வியை மேலும் எழுப்பியுள்ளன.