காதலித்து மணம் முடித்து, மதம் மாற்றி பாலியியல் சித்ரவதை செய்ததோடு, தீவிரவாத அமைப்புக்கும் தன்னை பயன்படுத்திக் கொள்ள முயன்றதாக கேரள உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில் இந்து பெண்களை, சில இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி திருமணம் செய்து மத மாற்றம், தீவிரவாத அமைப்புகளுக்கு பயன்படுத்துவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களே களத்துக்கு வந்து, வழக்கு தொடர்வதும் அதிகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலாவுக்கும் (24) ஷபின்ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். ஆனால் ஷபின்ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும், தன் மகளை மீட்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்திருமணத்தை ரத்து செய்து, அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைத்தனர்.
இதனை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை கடந்த 30-ம் தேதி வந்த போது, வரும் 27-ம் தேதி அகிலா என்ற ஹாதியா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கேரளாவில் இதனை ‘லவ் ஜிகாத்’ என்றே இந்து அமைப்புகள் கூறிவருகின்றனர். கேரள உயர் நீதிமன்றமும் இந்த திருமணத்தை ரத்து செய்தபோது இதே சந்தேகத்தை எழுப்பித் தான் தேசிய புலனாய்வு அமைப்பிடம் விசாரிக்க உத்தரவிட்டது.
மற்றொரு பெண் வழக்கு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவை சேர்ந்த இன்னொரு பெண்ணும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் அந்த பெண் தரப்பு வழக்கறிஞர் சேதுநாத் கூறுகையில், “கேரள இந்து குடும்பத்தில் பிறந்த பெண், அப்பாவின் பணி நிமித்தம் குஜராத்தில் வளர்ந்தார். உயர் கல்விக்காக பெங்களூர் சென்றபோது, புதுமாகே பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் அறிமுகமாகியுள்ளார். அவர் இந்த பெண்ணை காதலித்து நெருக்கமாக படம் எடுத்துள்ளார். அதை செல்போனில் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மிரட்டி, மிரட்டியே கட்டாயமாக மதமாற்றம் செய்துள்ளார்.
ஜாகிர் நாயக்கின் மதப்பிரச்சாரத்தை கேட்க நிர்பந்தித்து இருக்கிறார். கோழிக்கோடு அழைத்து சென்று அப்பெண்ணுக்கு ஆயிஷா என பெயர் மாற்றி திருமணம் செய்துள்ளார். அவருக்கு பாலியல் அடிமையாகவே வைத்துள்ளார். தொடர்ந்து சிரியா ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு பயன்படுத்தவும் திட்டம் தீட்டியிருந்தார். ஒரு கட்டத்தில் இந்த பெண் பெற்றோரை தொடர்பு கொள்ள, அவளுக்கு விமான டிக்கெட்டை எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி, அதை அவள் காட்டி, நிலைமையை எடுத்து சொல்லி மீண்டு வந்ததே பெரும் கதை. கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் அந்த பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவ்வழக்கின் விசாரணை 13-ம் தேதி வருகிறது. ரியாஸ் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.” என்றார்.
பாஜக குற்றச்சாட்டு
பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் கூறுகையில், “கேரளாவில் இந்து பெண்களை இஸ்லாமியர்கள் சிலர் காதலித்து திருமணம் செய்து தீவிரவாத நடவடிக்கை, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. கேரளாவில் இடதுசாரி, காங்கிரஸ் இரண்டில் எது ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ” என்றார்.
அண்மையில் கேரளம் வந்திருந்த தேசிய மகளிர் ஆணையத்தின் செயல் தலைவர் ரேகா ஷர்மா, “கேரளாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளைக்கூட மிரட்டியும், காதலித்தும் மதம் மாற்றுவதாக புகார்கள் வந்துள்ளன. கோழிக்கோட்டில் நடந்த இது தொடர்பான அமர்வில் எனக்கு அனைத்து மதங்கள் மீதும் இது மாதிரியான புகார்கள் வந்துள்ளன. இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்தார். இதனை கேரள மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஜோசப்வயன் மறுத்துள்ளார்.