போப்பாண்டவர் பிரான்சிசை கேரளத்துக்கு வருமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். போப்பாண்டவரை வாடிகனில் சந்தித்து இதுகுறித்த முதல்வரின் கடிதத்தை வழங்கியதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.கேரள மக்கள் சார்பில் போப்பாண்ட வருக்கு அமைச்சர் நினைவுப்பரிசு வழங்கினார். ‘கடவுளின் சொந்த நாட்டுக்கு’ வர விருப்பம் தெரிவித்த போப்பாண்டவர், அன்பான வரவேற்பளித்ததாகவும், கேரளத்தின் சிறப்புகளைப்பற்றி தம்மிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வர போப்பாண்டவர் விரும்புவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த நவம்பர் மாதம் மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு போப்பாண்டவர் சென்றிருந்தார். அப்போது அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைக்க வேண்டும் என்று பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.