ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் விலகிய கிறிஸ் லின்னுக்கு பதிலாக கேமிரான் ஒயிட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 14ல் மெல்போர்னில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்பேன் (ஜன. 19), சிட்னி (ஜன. 21), அடிலெய்டு (ஜன. 26), பெர்த் (ஜன. 28) நகரங்களில் நடக்கவுள்ளன.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் லின் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் இவர், கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகினார். இதனையடுத்து, கிறிஸ் லின்னுக்கு பதிலாக கேமிரான் ஒயிட், 34, தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 4 டெஸ்ட், 88 ஒருநாள், 47 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ள ஒயிட், கடைசியாக கடந்த 2015ல் ஹோபர்ட் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். தற்போது இவர், ‘பிக் பாஷ் டுவென்டி–20’ தொடரில் மெல்போர்ன் ரேனிகட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.