கடந்த 08.07.21 அன்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் இருந்து கொண்டு தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று(14) ஆறாவது நாளாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
அந்தவகையில் 14.07.21 இன்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தவாறு போராட்டத்தை தொடர்கின்றனர்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில் இந்த அரசு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களை விடுவிக்காவிடின் இதனிலும் விட பாரிய செயற்பாட்டிற்கு போகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அரசு சுகாதார வழிமுறைகளை பாவித்து மக்களின் போராட்டங்களை நசுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் அரசாங்கம் என்ன செய்கின்றது என்று நாங்கள் பார்த்து தீர்மானம் எடுப்போம் இந்த நாட்டில் மக்கள் எங்களுக்காக போராடுகின்றார்கள். மக்களுடன் நாங்கள் இணைந்து இந்த நாட்டில் ஜனநாயகம் சுதந்திரத்தை வெல்வதற்காக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் (13) முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை பார்வையிட சென்ற மனித உரிமை அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக அதிகாரிகள் நேற்று (13) காலை கேப்பாபிலவு விமானப்படைத்தளம் சென்றுள்ளார்கள்.
உள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை பார்வையிட உள்ளே செல்ல அனுமதி கோரியுள்ளார்கள் விமானப்படை வாசலில் நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கான அனுமதியினை மறுத்துள்ளார்கள். இந்நிலையில் அவர்கள் திரும்பி சென்றிருந்தனர்
இவ்வாறே அண்மைய நாட்களில் யாழ் மாநகர முதல்வர் ,சட்டத்தரணிகள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் தனிமைப்படுத்தலில் இருக்கும் இலங்கை ஆசிரியர் சங்க செயற்பாட்டாளர்களுக்கு பொருட்களை வழங்கி வைத்துள்ளார்கள்.
உள்ளே தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருப்பவர்களுக்கு வெளியில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் விமானப்படையினரின் வாசலில் உள்ள காவலரணில் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் பொருட்களின் பையில் யாருக்கு என பெயர் எழுதி பெற்றுக் கொள்ளப்படுகிறது, பொருட்கள் கொண்டு செல்பவர்கள் விமானப்படையினரால் அடையாளத்தினை உறுதிப்படுத்தப்பட்டு வருவதுடன் விமானப்படை வாசலில் ஊடகவியலாளர்களோ அல்லது பொருட்களை கொண்டு செல்பவர்களோ ஒளிப்படங்கள் எடுக்க முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.