ஐ.பி.எல் வந்து விட்டது. சி.எஸ்.கே மீண்டு வந்து விட்டது. சேப்பாக்கம் ஸ்டேடியம் அலங்காரத்துடன் தயாராகி வருகிறது. டுவைன் பிராவோ சென்னை வந்துவிட்டார். சென்னை வந்து சேர்ந்த வீரர்கள் பி கிரவுண்டில் பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர். ப்ரோமோ, பிரஸ் மீட் என சி.எஸ்.கே நிர்வாகம் பிஸியாகி விட்டது. அப்படியொரு ஸ்பான்ஷர் பிரஸ் மீட்டில் முரளி விஜய், டுவைன் பிராவோ இருவரும் சி.எஸ்.கே சார்பில் கம்பேக் கொடுத்தனர்.
“வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுவிட்டது. ஒருவேளை தகுதிபெறாமல் இருந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பையை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?’’
டுவைன் பிராவோ: “உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றதற்காக வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களை நினைத்து சந்தோஷப்படுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பை என்பது இத்தாலி இல்லாத ஃபிஃபா உலகக் கோப்பையைப் போன்றது. அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் இளமையான அணி. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நடக்கும் களேபரங்களுக்கு இடையே, அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் எப்போது நன்றாகவே விளையாடியிருக்கிறது.’’
“சென்னை அணிக்குத் திரும்பியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
பிராவோ: “சென்னைக்குத் திரும்புவது என்பது வீட்டுக்குத் திரும்புவதுபோன்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியை மிஸ் செய்தது கொஞ்சம் ஏமாற்றமே. ஐ.பி.எல் ஏலத்தின்போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். எப்படியாவது சி.எஸ்.கே என்னை ஏலத்தில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது நடந்து விட்டது. என் மீது நம்பிக்கை வைத்திருந்த அணி நிர்வாகத்துக்கு நன்றி. சி.எஸ்.கே அணியில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஷ் தொடருக்குப் பிறகு வேறு எந்த அணியிலும் விளையாடவில்லை.
“வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்கள் அனைவரும் ஐ.பி.எல் தொடரில் ஜொலிப்பது எதனால்?’’
பிராவோ: “எங்களை நாங்களே கொண்டாடக்கூடியவர்கள். டி-20-யைப் பொறுத்தவரை என்டெர்டெயன்மென்ட்தான் முக்கியம். மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர். எங்களின் கேம்ஸ்டைல் அதற்கு உகந்ததாக இருக்கிறது. அதனால்தான் கெய்ல், பொல்லார்டு, டேரன் சமி போன்ற வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமாக வலம்வருகிறார்கள். அதேமாதிரி வெறுமனே விளையாட வேண்டும் என்பது மட்டுமல்லாது வெற்றிபெற வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் ஊறிப்போயிருக்கிறது.
“சி.எஸ்.கே அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடியிருக்கிறீர்கள். அப்போது போலிஞ்சர், ஹில்ஃபெனாஸ், நெஹ்ரா போன்ற சீனியர் பெளலர்கள் அணியில் இருந்தனர். இப்போது அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. நீங்கள்தான் வேகப்பந்துவீச்சை முன்னின்று நடத்த வேண்டும் என்பதில் நெருக்கடி இருக்கிறதா?’’
பிராவோ: “கண்டிப்பாக நெருக்கடி இல்லை. வாட்சன், ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடியும் இல்லை. எல்லாவற்றையும்விட கேப்டன் கூல் (தோனி) இருக்கிறார். அவர் எப்போதுமே அந்த மொமன்ட்டை அனுபவிக்கச் சொல்வார். அதனால், எந்த நெருக்கடியும் இல்லை. தவிர, இளம் உள்ளூர் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
“ `டெஸ்ட், டி-20 போட்டிகள் மட்டுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருக்கும்’ என ஷேன் வார்னே சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்து?’’