கேப்பாபிலவில் உள்ள மக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்காக இராணுவத்துக்கு மேலும் 48 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சர் சுவாமி நாதனின் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட பணத்துக்குக் காடு மண்டிய காணியையே இராணுவம் விடுவித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் மீண்டும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில் மக்கள் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
காணிகளை விடுவிப்பதானால் அதிலுள்ள தமது முகாம்களை இடமாற்ற நிதி தேவை என்று நிபந்தனை விதித்து வருகின்றனர்.
இதனால் மீள்குடியேற்ற அமைச்சு ஏற்கனவே 5 மில்லியன் ரூபா நிதியை வழங்கியிருந்தது.இதனை அடுத்து 180 ஏக்கர் காணிகளை விடுவித்தனர்.
மக்கள் குடியிருப்பு இல்லாத காடுகளே அவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய 111 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்காக இராணுவத்துக்கு 48 மில்லியன் ரூபாவை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை மீள்குடியேற்ற அமைச்சு விரைவில் அமைச்சரவையின் முன் வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.