தனி நாடு கோரிய போராடிய கேட்டலோனியா முன்னாள் அமைச்சர் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தார்.
ஸ்பெயின் நாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஸ்பெயினில் இருந்து பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஸ்பெயின் அரசு உடனடியாக கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்து, தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
மேலும், கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பியூட்ஜ்மன்ட் மற்றும் அவரது 13 அமைச்சர்களை பதவிநீக்கம் செய்து, தேச துரோகம், கிளர்ச்சியில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஸ்பெயின் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 9 அமைச்சர்கள் நேற்று மாட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 9 அமைச்சர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதில் 8 பேருக்கு ஜாமீனில் வர முடியாத சிறை தண்டனையும், ஒருவருக்கு ரூ.40 லட்சத்துக்கான பிணைத்தொகையுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது. நீதிபதியின் உத்தரவை கேட்டதும், கேட்டலோனியா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் தலைவர் கார்லஸ் உட்பட மற்ற அமைச்சர்கள் பெல்ஜியத்தில் தற்போது உள்ளனர். அவர்களை பிடிக்க நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
ஸ்பெயின் சட்டப்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள சாட்சிகளை கலைக்காமல் இருக்க, அவர்களை சிறையில் அடைக்க விசாரணை நீதிபதியால் உத்தரவிட முடியும். தண்டனை நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு 30 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்.