ஃப்ளிப்கார்டில் ஆசை ஆசையாக ஐபோன் ஆர்டர் செய்த மும்பை இளைஞருக்கு சலவை சோப்பு வந்து சேர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு….
’நவி மும்பை, பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் நாக்ராலி(26). ஐடி துறையில் பணிபுரியும் நாக்ராலி சமீபத்தில் ஃப்ளிப்கார்ட்டில் ரூ.55,000 மதிப்புள்ள ஐபோன் 8 ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிட்டார். கடந்த ஜனவரி 22-ம் தேதி டெலிவரி செய்பவர் பார்சலைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பார்சலைத் திறந்து பார்த்தபோது நாக்ராலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐபோன் பாக்ஸில் பின்க் நிற சோப்புக்கட்டி இருந்தது. உடனே ஃப்ளிப்கார்டின் புகார் எண்ணுக்குத் தொடர்புகொண்டு நடந்ததை விவரித்துள்ளார். ஃப்ளிப்கார்ட் பிரதிநிதிகள் நாக்ராலியின் ஆர்டர் குறித்து ஆய்வு செய்து பார்த்து ‘நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் ஆர்டரை டெலிவரி செய்துவிட்டோம்’ என்று கூறி அவரின் புகாரை ரத்து செய்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த நாக்ராலி, பைகுல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் டெலிவரி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.