பாகிஸ்தானின் கோர்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கி என்ற நகரத்தின் அருகே திங்கட்கிழமை காலை இரு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு “டவுன் டிராக்கிற்கு” மாற்றப்பட்ட பின்னர் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலுடன் மோதுண்டே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ரைட்டி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
கோட்கி, தர்கி, ஒபாரோ மற்றும் மிர்பூர் மாதெலோ ஆகிய மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி துணை ஆணையர் உஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.