கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த இரண்டாம் கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) திட்டத்தை சீனா வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.
இந்த விசாரணைகளில் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து கொவிட்-19 வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கருதுகோள்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய சீன சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின்,
உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை முதன்முதலில் படித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். சில அம்சங்களில், கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அடுத்த கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டம் பொது அறிவை மதிக்கவில்லை. அது அறிவியலுக்கு எதிரானது. அத்தகைய திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 இன் தோற்றம் குறித்த அதன் விசாரணையிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டது.
அதில் வைரஸ் 2019 டிசம்பரில் மனிதர்களுக்கு பரவுவதற்கு முன்பு ஒரு விலங்கினத்தில் தோன்றியிருக்கலாம் என்று தீர்மானித்தது.
இந் நிலையில் உலக சுகாதார அமைப்பு இம் மாதம் சீனாவில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து இரண்டாம் கட்ட ஆய்வுகளை முன்மொழிந்ததுடன், வுஹான் நகரில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் சந்தைகளின் தணிக்கை உட்பட, அதிகாரிகளிடமிருந்து வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்தது.
முதன்முதலில் அறியப்பட்ட கொவிட் வைரஸ் மத்திய சீன நகரமான வுஹானில் 2019 டிசம்பரில் வெளிவந்தன. நகர சந்தையில் உணவுக்காக விற்கப்படும் விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களிடம் குதித்ததாக நம்பப்படுகிறது.