கொரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு!– மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன
டெய்லி பினான்சியல் ரைம்ஸ்சுக்கு அளித்திருந்த அவரது செவ்வியின் இரண்டாவது பகுதி-
கேள்வி: சிறிலங்கா இராணுவமானது 2005-2009 வரையான காலப்பகுதியில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு இராணுவமாக மாறியதாக நீங்கள் கூறினீர்கள். இந்த மாற்றத்திற்கான காரணங்கள் என்ன?
பதில்: நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் இதனை நான் இங்கு உறுதிப்படுத்த முடியும். அப்போதைய சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான தெளிவான இலக்கைக் கொண்டிருந்தனர்.
போரில் அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தவர் என்ற வகையில் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா புலிப் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தனக்குப் பின் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பவரிடம் போரைக் கையளிக்க மாட்டேன் என உறுதிபூண்டார். அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
ஆனால் அப்போதைய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவில்லாது புலிகளை இவரால் அழித்திருக்க முடியாது. அரசாங்கமானது சிறிலங்கா இராணுவத்தினரின் ஆளுமையைப் பலப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியது. இதற்காக இராணுவத்திற்கான ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 120,000 ஆகக் காணப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை 230,000 ஆக உயர்வடைந்தது.
நீங்கள் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவாருங்கள் அதில் நாங்கள் தலையீடு செய்யமாட்டோம் என முன்னாள் அதிபர் ராஜபக்ச, சரத் பொன்சேகாவிடம் தெரிவித்திருந்தார். அரசாங்கம் எமக்கு எல்லாவற்றையும் வழங்கியது. அதாவது யுத்தத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து வளங்கள், ஆயுதங்களை அரசாங்கம் எமக்கு வழங்கியது.
இக்காலப்பகுதியில், இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆற்றல் மிக்க கட்டளைத் தளபதிகளை அப்போதைய இராணுவத் தளபதி தெரிவு செய்தார். இவர் மூப்பு அடிப்படையில் தெரிவு செய்யாது இராணுவத் தளபதிகள் கொண்டிருந்த ஆற்றல் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் கட்டளைத் தளபதிகளை நியமித்தார்.
இந்த நேரத்திலேயே நான் பிரிகேடியராகப் பதவி உயர்த்தப்பட்டேன். எனக்கு மேல் பல மூத்த தளபதிகள் இருந்தபோதிலும் நான் ஒரு டிவிசன் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டேன். லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் ஆசியும் கிடைக்கப்பெற்றது.
நன்கு திட்டமிடப்பட்ட வகையில் கொமாண்டோக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டமையின் விளைவாக புலிகளின் தளங்களை வெற்றிகரமாக அழிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுறுவதற்கான காரணங்கள் எவை?
பதில்: 2005 இற்கு முன்னர் யுத்தம் புரிந்த அதே இராணுவத்துடன் புலிகள் சண்டை பிடிக்கவில்லை என்பதே பிரதான காரணமாகும். இறுதி யுத்தத்தின் போது மேலும் துறை சார் வளர்ச்சியைப் பெற்றிருந்த வித்தியாசமான உளச்சார்பைக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்துடனேயே புலிகள் யுத்தம் புரியவேண்டியிருந்தது.
எல்லா மட்டங்களிலும் நியமிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவக் கட்டளைத் தளபதிகள் சிறந்த அனுபவத்தைப் பெற்றிருந்தனர். நான் முன்னர் கூறியது போன்று நாங்கள் புலிகளின் பலவீனத்தை அடையாளங் கண்டுகொண்டு அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு செயற்பட ஆரம்பித்தோம்.
நாங்கள் முன்னர் ஒரு மரபுசார் இராணுவமாகப் போர் புரிய விரும்பினாலும் கூட, நான்காம் கட்ட ஈழப்போரில் சிறப்புப் படைகள் மற்றும் கொமண்டோக்கள் தமது சிறிய குழுக்களை போரில் ஈடுபடுத்தி போரை வெற்றி கொள்ள உதவினர். புலிகள் அமைப்பானது இந்த முறையையே முன்னர் பின்பற்றி எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
பிரபாகரன் தனது கெரில்லா போர் முறைமையிலிருந்து மாறவிரும்பிய அதேவேளையில் நாங்கள் எம்மாலானளவு மரபுசார் போரியலிலிருந்து எம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என முயற்சித்தோம்.இதுவே புலிகளின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.
இதன் பின்னர் புலிகள் தமது சொந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். இதுவே புலிகள் தமது மக்களின் ஆதரவை இழப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
உயர் போரியல் படையாக மாறிய பின்னர், பிரபாகரன் தனது படையை மரபுசார் படையாக மாற்றியமைத்தமையானது புலிகள் விட்ட மிகப் பெரிய தவறுகளுள் ஒன்றாகும்.
வேவுப் புலிகள், வெடிபொருள் வல்லுனர்கள், தற்கொலைக் குண்டுதாரிகள், அதனுடைய ஆட்லறிப் படையணி போன்ற உயர் போரியல் ஆற்றலைக் கொண்டிருந்த புலிப்போராளிகளை பிரபாகரன் மரபுசார் படையணியாக மாற்ற முற்பட்டமையே போர்க்களத்தில் புலிகள் தோற்றதற்கான பிரதான காரணமாகும்.
சிறிலங்கா இராணுவத்தினர் பல்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தக் கூடிய உயர் வலுவுள்ள ஒரு இராணுவமாக மாறியமை புலிகளின் தோல்விக்கான பிறிதொரு காரணமாகும்.
இதன்காரணமாக, மனிதவலுவைக் குறைந்தளவில் கொண்டிருந்த புலிகள் தொடர்ந்தும் போர்க் களத்தில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கேள்வி: போரில் ஏற்பட்ட சோர்வுநிலை மற்றும் புலிகள் அமைப்பின் மூத்த கட்டளைத் தளபதிகளின் வயதுகள் அதிகரித்தமை இதனால் இவர்களால் துடிப்புடன் செயலாற்ற முடியாமையே புலிகள் போர்க் களத்தைத் தக்கவைத்திருக்க முடியாமைக்கான காரணங்கள் என புலிகள் அமைப்பின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.தமிழினி தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
பதில்: நான் தமிழினி எழுதிய நூலை வாசிக்கவில்லை. ஆனாலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரபாகரன் இளமையாக இருந்தாலென்ன அல்லது அவருக்கு வயது போயிருந்தாலும் கூட இவர் தொடர்ந்தும் இரக்கமற்ற ஒருவராகவே விளங்கினார்.
யுத்தத்தின் இறுதிக் கணம் வரை பிரபாகரனின் தலைமைத்துவம் மிகவும் மேன்மை மிக்கதாகக் காணப்பட்டது. புலிகளின் ஏனைய தலைவர்களான பாணு, ரட்ணம் மாஸ்ரர், சூசை போன்றவர்களும் அசாத்தியமான கட்டளைத் தளபதிகளாக விளங்கினர்.
போரின் இறுதிச் சில நாட்களில் சூசை கட்டளை வழங்கிய போது எவரும் பின்னோக்கிச் செல்ல விரும்பவில்லை. இந்தத் தலைவர்களின் கட்டளையின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள் சிறப்பாகச் செயற்பட்டனர்.மாரடைப்புக் காரணமாக இறந்த புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான பால்ராஜின் இழப்பானது புலிகளுக்குப் பாரிய இழப்பாகும்.
இவர் புலிகள் அமைப்பின் சிறந்த தலைவர்களுள் ஒருவராவார். இதேபோன்று புலிகள் அமைப்பின் சிறந்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மானையும் புலிகள் இழக்க வேண்டியேற்பட்டது. இதேபோன்று புலிகளின் கட்டளைத் தளபதி தீபன் புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பலியாகினார்.
புலிகள் அமைப்பின் சிறந்த தளபதிகள் தொடர்ந்தும் பலியாகிய போதிலும் புலிகளின் உயர் தலைமையானது யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் வரை தைரியத்துடன் யுத்தத்தை நடாத்தியது.
கேள்வி: இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தின. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்களின் பதில் என்ன?
பதில்: இறுதி யுத்தத்தின் போது டிவிசன் கட்டளைத் தளபதியாக இருந்தவன் என்கின்ற வகையில் நான் இத்தகைய குற்றச்சாட்டுக்களைப் பலமாக மறுக்கிறேன். போரின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் எவற்றிலும் ஈடுபடவில்லை.
இது இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான யுத்தமாகும். போர்ச் சூழலில் நிச்சயமாக இழப்புக்கள் ஏற்படும். மனிதாபிமானச் சட்டத்தை நாங்கள் பின்பற்றிய பொதுமக்கள் மீதான இழப்புக்களைக் குறைப்பதற்கான சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்தோம்.
இதன் காரணமாகவே நாங்கள் எமது இராணுவ நடவடிக்கையை மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொண்டோம்.இந்த இராணுவ நடவடிக்கையின் அர்த்தத்திற்கு நாங்கள் முழுமையாக மதிப்பளித்தோம். நாங்கள் மக்கள் வாழ்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை.
பூச்சியப் பொதுமக்கள் இழப்பைப் பின்பற்றுமாறு அரசாங்கம் எமக்கு அறிவுறுத்தியது. இதனை நாங்கள் பின்பற்றினோம்.
கேள்வி: இறுதியாக, புலிகளின் தலைவர் தங்களின் வீரர்களுடன் 45 நிமிட யுத்தத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்களா?
பதில்: எமது இராணுவத்தினர் அவரை மிக விரைவாகப் பிடித்துவிடுவார்கள் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்கள் பாதுகாப்புத் தேடி எமது பக்கத்திற்கு இடம்பெயர்ந்து வந்தபோது நான் இதனை உணர்ந்தேன்.
நாங்கள் வரைபடத்தைப் பார்த்த போது, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மிக வேகமாக எமது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதை நாம் அறிந்துகொண்டோம்.
பொதுமக்களுடன் சேர்ந்து புலிகளும் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிவந்தமையே இதற்கான காரணமாகும். இதனால் பிரபாகரனுடன் யுத்தம் புரியும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நாங்கள் ஊகித்தோம்.
18 மே 2009 அன்று யுத்தமானது முடிவிற்கு வந்தது. ஆனால் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எனக்குள் அந்தப் பெரிய கேள்வி ஒன்று இருந்தது. அதாவது பிரபாகரன் எங்கே? என்பது தான் அந்தக் கேள்வியாகும்.
நாங்கள் வடக்கின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் கைப்பற்றி விட்டோம் என அறிவிக்குமாறு நான் இராணுவத் தளபதியிடம் கேட்ட போது அதற்கு அவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்காது யுத்தமானது ஒருபோதும் நிறைவுக்கு வராது எனக் கூறினார்.
ஒவ்வொருவரும் பிரபாகரனைப் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்த போது, நந்திக்கடல் நீரேரியில் இடம்பெற்ற 45 நிமிட யுத்தத்தின் பின்னர் பிரபாகரனை நான்காவது விஜயபா காலாற்படையணி பற்றாலியன் வீரர்கள் கொன்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கேள்வி: பிரபாகரன் உயிருடன் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார் என சிலர் கூறுகின்றனர். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
பதில்: இது வதந்தி. தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என்பதே உண்மையாகும். பிரபாகரன் அங்கிருந்தார் என்கின்ற தகவலானது மே 19 காலை வரை எவருக்கும் தெரியாது. இதுவே புலிகளுடனான எமது இறுதி யுத்த களமாக இருந்தது.
எமது வாழ்வுடன் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக விளையாடிய மனிதன் எனது கண்முன்னால் வீழ்ந்து கிடந்த அந்தத் தருணமானது போர் வீரர் என்ற வகையில் என்னால் மறக்க முடியாத ஒரு தருணமாகும். ‘சேர் நாங்கள் பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்’ என எனது வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தார்கள்.
எமது இராணுவத்தின் அனைத்து டிவிசன் தளபதிகள் மற்றும் வீரர்களின் முழுமையான அர்ப்பணிப்பின் காரணமாக இந்த யுத்தமானது முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.
கேள்வி: பிரபாகரனின் இளைய மகன் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
பதில்: இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். இவரை சிறிலங்கா இராணுவத்தினர் ஒருபோதும் உயிருடன் பிடிக்கவில்லை. இது பிழையான குற்றச்சாட்டாகும்.
கேள்வி: தங்களது இளமைக்காலம் முழுமையையும் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக புலிகள் அமைப்புடன் போரிட அர்ப்பணித்து தற்போது சிறிலங்கா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்டீர்கள். தற்போது நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில்: ஆம், மூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் அணிந்த சீருடையைத் தற்போது நான் கழற்றிவிட்டேன். நான் வெற்றி பெற்ற சிறிலங்கா இராணுவத்தின் பெருமைக்குரிய வீரனாக செப்ரெம்பர் 05 அன்று ஓய்வுபெற்றுள்ளேன். நான் ஒருபோதும் தோல்வியுற்ற வீரனாக ஓய்வுபெற விரும்பவில்லை.
ஆகவே நான் எனது கனவை நனவாக்கி விட்டேன். இனி நான் எனது குடும்பத்தாருடன் சாதாரண வாழ்க்கை வாழ்வேன்.எனக்கு மட்டுமல்லாது, போரில் கட்டளையிட்ட எனது சக அதிகாரிகளும் தமது இளமைக்காலம் முழுமையையும் புலிகள் அமைப்புடன் போரிடுவதற்காக காடுகளில் செலவிட்டதன் மூலம் தமது வாழ்வை அர்ப்பணித்தனர்.
நாங்கள் அதிகளவான தியாகங்கள், ஈடுபாடுகள் மற்றும் அர்ப்பணிப்புக்களின் மூலம் சமாதானத்தை எட்டியுள்ளோம். நிலையான சமாதானம் ஒன்றை நாட்டில் தொடர்ந்தும் தக்கவைத்திருக்க வேண்டியது இந்த நாட்டின் அரசியற் தலைமையின் பொறுப்பு என நான் கருதுகிறேன்.
நாங்கள் நல்லிணக்கம் தொடர்பாகக் கதைக்கிறோம். ஆனால் நிலஅதிகாரம், அதிகாரப் பகிர்வு, காவற்துறை மற்றும் நீதி சார் அதிகாரம், சிங்களவர் என்ற வகையில் கிளிநொச்சி வைத்தியசாலை பொறுப்பதிகாரியை நீக்குமாறு கோரிக்கை விடுத்தமை தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் செவிமடுக்கிறோம்.
தேசிய கீதத்தை நாங்கள் தமிழில் இசைத்தோம். ஆனால் மீளிணக்கம் இடம்பெறவில்லை. சமாதானத்தைக் குழப்பும் அண்மைய சில செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியல் தலைமையானது இவற்றை அகன்ற திரையின் ஊடாகப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: இந்தச் சூழலானது சரியான முறையில் கையாளப்படாவிட்டால், புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவார்கள்.
ஏனெனில் 12,400 வரையான முன்னாள் போராளிகள் சமூகத்தில் வாழ்கின்றனர். இவர்கள் முழுமையான புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்பட்டாலும் கூட, இவர்கள் பொதுமக்களுடன் 100 வீதம் ஒன்றிணைந்து வாழ்கின்றனர் எனக் கருதமுடியாது.
இவ்வாறானதொரு சூழல் உருவாகினாலும் கூட பிரபாகரனின் தலைமைத்துவம் போன்று புதிய தலைமைத்துவமானது வினைத்திறனுடன் செயற்படாது.
புலிகள் அமைப்புத் தொடர்பான கருத்தியலானது தற்போதும் உயிர்பெற்று வாழ்வதால் இவர்கள் மீண்டும் புத்துயிர் பெறலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலானது ஈழம் மட்டுமே என்பதால் தமிழ் அரசியற் தலைவர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.