“பானை உண்டு நெருப்பில்லை, மகிழ்ச்சி உண்டு துன்பமில்லை” என -10° செல்ஷியஸில் பனி விழும்போது பொங்கியது பொங்கல். கொரியா தேசத்தில் வாழும் தமிழர்கள் தங்கள் மரபார்ந்த தமிழர் திருநாளைக் கொண்டாடுவதற்கு, அங்கு இயங்கிவரும் `கொரிய தமிழர் தளம்’ தமிழர் திருநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. சூரியன் உதித்த காலை வேளையில் பனி படர்ந்த வீதிகளுக்கிடையே தமிழ் மக்கள் பலர் ஒன்றுகூட காலையில் தொடங்கியது பொங்கல் விழா. புதுப்பானையில் பச்சரிசி பொங்கி, கரும்பு வைத்து பால் பொங்க `பொங்கலோ… பொங்கல்… பொங்கலோ… பொங்கல்..!’ என்று அனைவரும் உற்சாகக் கூவலிட பானையில் பொங்கல் பொங்குவதைப் போல அனைவர் உள்ளங்களிலும் உற்சாகம் குடிகொண்டது தெரிந்தது.
கொரியாவில் சியோல், சுஒன், தேஜான், புசான், உல்சான், சுஞ்சான் போன்ற நகரங்களில் வசிக்கும் தமிழர்களை பல மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஒருங்கிணைத்து, `சேஜோங்’கில் இயங்கிவரும் கொரியா பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து கொரியவாழ் இளம் ஆராய்ச்சி மாணவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அருண்குமார் கூறுகையில்…,
“கடல் கடந்து கல்வி கற்க வந்தவர்களும் பணிபுரிய வந்தவர்களுமே இங்கு அதிகம். எங்களுக்கான மகிழ்ச்சியின் வடிகாலாக விழாக்களே இருக்கும். அதிலும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவுகோலே கிடையாது. சின்னவயசுல வாய்க்கா வரப்புல டிரவுசர் போட்டுச் சுத்திக்கிட்டு, வைக்கப்போரில் ஒரு படையோடு விளையாண்டு அக்கப்போர் செய்த நாளெல்லாம் மகிழ்ச்சியை மனதார நெய்த நாள்கள். அந்த நாள்களின் நினைவுகளை நினைத்துப்பார்த்து மகிழவே இதுபோன்ற விழாக்கள் அத்தியாவசியம்” என்றார்.
விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பத்மநாபன் மோகன், “நம் ஊரில் மூன்று நாள் கொண்டாடும் பொங்கலை இங்கே ஒரு நாளாவது கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தோம். அதுவும் சிறப்பாக. தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் என்று எல்லாரும் இணைந்து பொங்கலுக்கு முன்னரே கொண்டாடுவார்கள். பொங்கலன்று தனித்தனியாக இல்லங்களில் கொண்டாடுவார்கள். நாங்கள் சமத்துவப் பொங்கலை தைத்திங்கள் முதல் நாளில் எல்லோரும் இணைந்து கொண்டாட வந்தோம். அதற்கான திட்டமிடலை வடிவமைத்து தமிழகத்திலிருந்து வந்தவர்கள், இலங்கைத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்தோம்” என்றார்.
ஆராய்ச்சிப் பேராசிரியராக இருக்கக்கூடிய முனைவர் ஆனந்த் செபாஸ்டியனிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் தை பிறப்பதற்கு முன்னரே கொரியாவில் பிறந்துவிட்டது. பொங்கல் விழாவும் பிறந்த பிள்ளையை வளர்த்தெடுப்பதுபோல தொடங்கி நடைபெறலாயிற்று. இயற்கை வழிபாட்டுடன் காலையில் பொங்கல் விழாவைத் தொடங்கினோம். பொம்மைப் பானைகளுக்குள் பொங்கிய பஞ்சுப்பொதி பொங்கல் அரங்குக்குள் கொண்டுவர விழா ஆரம்பமானது.
`தமிழர் திருநாள்’ ஒருநாள் கூடிக் கலையும் கொண்டாட்டமாக மட்டும் இருந்திடாமல், மாற்றம் நோக்கிய விடியலாக இருக்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, ஊடகவியலாளர் ஆழி செந்தில்நாதன் சென்னையிலிருந்து காணொலி வழியே பேசினார். அவருடன் கலத்துரையாடலிலும் கொரியவாழ் தமிழர்கள் ஈடுபட்டனர்.
பொங்கல் விழாவையொட்டி கொரியாவில் வாழும் தமிழர்களிடையே மூன்று தலைப்புகளின் கீழ் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
1) தமிழர் பண்பாடும் அறிவியலும்
2) தமிழர் தன்னாட்சியில் பயன்கள்
3) மக்கள் மனோநிலையில் ஊடகத் தந்திரங்கள் – போன்ற தலைப்புகளில் வெகுவாக மக்கள் கலந்துகொண்டு எழுதினர். அவற்றில் ‘ஆண்கள் அரைஞாண்கயிறு கட்டுவதற்குக் குடலிறக்கம் தவிர்க்கப்படும்’ போன்ற அரிய தமிழர் அறிவியல் தரவுகள் வெளிப்பட்டன” என்று மகிழ்வுற்றார்.
அயலகத் தமிழர்கள் வான்பறவை என்றால், தமிழகம் அவர்களது கூடு. அங்கே நடக்கும் ஒவ்வொரு செயலும் மாற்றங்களைக் கொணரும். அதனால், தற்காலத் தமிழர் அரசியல் மற்றும் வாழ்வியல் குறித்த கேள்வி – பதில் அமர்வும் நடத்தப்பட்டன. முனைவர் இராமசுந்தரம், முனைவர் ஆரோக்கிய செல்வராஜ் மற்றும் மாணவர் அரவிந்த் ராஜா ஆகியோர் முன்னின்று நடத்திய இந்த அமர்வில், ரஜினியின் அரசியல் பயணம் முதற்கொண்டு பல கேள்விகள் விவாதத்தை விளைவிப்பதாக இருந்தன.
நிறைவில் சின்னச் சின்னக் குழந்தைகள் முன்னின்று ஆடிய தமிழர்களின் நாட்டுப்புற நடனமான கரகாட்டம், பெருத்த வரவேற்பைப் பெற்றிருந்ததும், வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரும்பு இனிப்பைக் கூட்டியிருந்ததும் நிகழ்ச்சிக்கு மேலும் இனிமை கூட்டியது. ஆண்களுக்கு கயிறு இழுத்தலும், பெண்களுக்கு கோலமும், குழந்தைகளுக்கு ஓவியமும் சிறப்புப் போட்டிகளாக அமைந்தன.
நம் மண்ணில் மரபார்ந்த கொண்டாட்டங்கள் நடப்பதைப்போல கடல் கடந்தும் அதேபோல் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தை ஓரிடத்தில் கூடிக்கொண்டாடிய கொரிய தமிழர்களுக்கு, பொங்கல் வாழ்த்துகளைச் சொல்வோமே!