கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவிக்கு தகுதியற்றவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் சுகாதார கட்டமைப்பு மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.சுகாதார சேவை அடிப்படை மனித உரிமைக்குள் ஏன் உள்வாங்கப்படவில்லை.
பிரித்தானியா உள்ளிட்ட முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் சுகாதார சேவை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகிறது. இலங்கையில் சுகாதார அமைச்சு ஒரு வியாபார களமாக காணப்படுகிறது.
நாட்டில் சுகாதார தரப்பில் ஒரு சாரார் இலவச சுகாதார சேவையை வர்த்தக மாபியாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் இலங்கையின் சுகாதார துறை இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் வருடாந்தம் பல வைத்தியர்களையும், தாதிகளையும் உருவாக்குகிறது.ஆனால் பெரும்பாலானோர் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.
மருத்துவ துறையில் தாதியர் இணைப்பில் தமிழ் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிங்களவர்களுக்கான நியமனத்தின் போது வேண்டுமாயின் சட்டங்களும் திருத்தம் செய்யப்படும்.
தமிழர்கள் திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறார்கள். இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாதியர் சேவையில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாளாந்தம் 420 பேர் வருகிறார்கள்.
மறுபுறம் பல இலட்சக்கணக்கானோர் மாதாந்தம் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் அந்த வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இது பாரியதொரு பிரச்சினையாகும்.
நாட்டின் சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் நீங்கள் பேசுவதை பேசுங்கள், நாங்கள் இவ்வாறு தான் இருப்போம் என்ற நினைப்பில் அவர் உள்ளார். இவ்வாறான தகுதியற்ற அமைச்சர் நீக்கப்பட வேண்டும் அல்லவா,?
கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத்துறைமை மேம்படுத்த முடியும். இவர் சுகாதார அமைச்சு பதவிக்கு தகுதியற்றவர். ஆகவே சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றார்.