உள்வீட்டுச் சண்டை காரணமாக கூட்டு எதிர்க் கட்சி இரண்டாக பிளவுபடும் நிலைமை காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசியலமைப்பு சபையிலிருந்து விலகுவது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக கூறப்படுகின்றது.
அரசியலமைப்பு சபையிலிருந்து கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விலக வேண்டும் என விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு எதிராக ஸ்ரீ ல.சு.க.யின் சில எம்.பி.க்கள் அரசியலமைப்பு சபையிலிருந்து விலகாமல், நாட்டுக்கு எதிராக வரும் விடயங்களை சரியாக இனங்கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஸ்ரீ ல.சு.க.யினரின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையிலிருந்து விலகுவதாக சபாநாயகரிடம் தமது அறிக்கையையும் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, பொலன்னறுவையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.ம.சு.மு.யின் ரொஷான் ரணசிங்கவும் அரசியலமைப்பு சபையிலிருந்து விலக வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார். இதனால், விலகக் கூடாதென்ற கருத்திலுள்ள ஐ.ம.சு.மு.யின் உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, ஸ்ரீ ல.சு.க. யைப் பிரதிநிதித்துவப்படுத்தி மஹிந்தவுடன் உள்ள எம்.பி. க்களுடன் ஜனாதிபதியுடன் உள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தியுள்ளதாகவும், இதன்பயனாக கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள குழுவொன்று அரசாங்கத்துடன் இணையவிருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.