கூட்டு எதிர்க்கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் இவ்வாரத்துக்குள் கைது?
கூட்டு எதிர்க்கட்சியின் ஏழு முக்கியஸ்தர்களை இவ்வாரத்துக்குள் கைதுசெய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 28ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளவுள்ள மக்கள் போராட்டம் (ஜனசட்டன) குறித்து அரசாங்கம் கடும் அச்சமடைந்துள்ளது.
அதனை முடக்கி, கூட்டு எதிர்க்கட்சியை பலவீனப்படுத்திக் காட்ட அரசாங்கம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருகட்டமாக எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏழுபேரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் என்னதான் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இந்த அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்று கூட்டு எதிர்க்கட்சிக்கு நன்றாகவே தெரியும்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இப்போதே பொலன்னறுவைக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ள முயற்சிப்பதே சாலச்சிறந்தது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.