தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே, தமிழ் பிரதேசங்களில் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும், செம்மலைப் பிரதேசத்தில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பெளத்த விகாரையும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரிவித்து கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலுரைத்த ஆளுநர், காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான ஒரு பதிலைத் தருவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது